ஜூலை 2021 இல் தனது 17 வயது சக பெண் ஊழியரைச் சந்தித்த சில மணிநேரங்களிலேயே CTV News அறிக்கையின்படி, காரின் பின் இருக்கையில் வைத்து அவரைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்த 47 வயதான பிரையன் ஜான் மைல்ஸ் (Bryan John Miles) என்பவருக்குக் குற்றம் நடந்து சுமார் ஐந்து ஆண்டுகளின் பின்னர் பி.சி. உயர் நீதிமன்ற நீதிபதி சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளார்.
கடந்த ஜனவரி மாதம் மைல்ஸை குற்றவாளியாக அறிவித்த நீதிபதி பிரியானா ஹார்ட்விக், ஜூலை 21 அன்று அவருக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தார். விசாரணைக் காவலில் கழித்த 320 நாட்களுக்கான சலுகை கழித்து எஞ்சிய காலத்திற்கு தண்டனை விதிக்கப்பட்டதற்கான விரிவான காரணங்கள் CTV News நீதிமன்றத் தீர்ப்பு அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளன.
பாதிக்கப்பட்ட பெண்ணின் கோரிக்கைக்கு அமைவாக, வழக்கில் விதிக்கப்பட்டிருந்த பெயர்களை வெளியிடுவதற்கான தடை நீக்கப்பட்டது. தீர்ப்பின் எழுத்துப்பூர்வ பதிப்பில் குற்றவாளியின் முழுப் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதுடன், பாதிக்கப்பட்ட பெண் “செல்வி வெனபிள்ஸ்” (Ms. Venables) எனக் குறிப்பிடப்பட்டுள்ளார்.
சம்பவம் நடந்த விதம்:
சம்பவம் நடந்த அன்று ஒசோயூர்ஸ் (Osoyoos) பகுதியில் உள்ள விடுதியொன்றின் உணவக சமையலறையில் வெனபிள்ஸ் பணிபுரிந்துள்ளார். அங்கு புதிதாக உதவிக்கு வந்திருந்த மைல்ஸ் என்ற நபருடன் இணைந்து பணியாற்றியுள்ளார். காலை 10:15 மணியளவில் புகைபிடிக்கும் இடைவேளையின் போது மைல்ஸ் தனது காரில் ஏற்றிச் சென்று கதவுகளைப் பூட்டி, மது அருந்தியவாறே காரைச் செலுத்திச் சென்றுள்ளார்.
பின்னர், ஒரு காபி கடைக்கு அருகே காரை நிறுத்தி, காரின் பின் இருக்கையில் வைத்து வெனபிள்ஸை கடுமையான பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளார். இறுதியில் மைல்ஸ் சுயநினைவை இழந்ததைத் தொடர்ந்து, காரில் இருந்து தப்பிச் சென்ற அப்பெண், பூங்காவில் இருந்த நகர ஊழியர் ஒருவரின் உதவியுடன் 911 அவசர இலக்கத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்தபோது மைல்ஸ் காரில் சுயநினைவின்றி அரை ஆடையுடன் கண்டெடுக்கப்பட்டார்.
வழங்கப்பட்ட தண்டனை:
மைல்ஸுக்கு மது மற்றும் போதைப்பொருள் பழக்கம் இருந்ததும், அவர் இதற்கு முன்னர் 17 குற்றச்சாட்டுகளில் தண்டனை பெற்றிருந்ததும் நீதிமன்றத்தில் தெரியவந்தது.
ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனையுடன் (1,825 நாட்கள்), ஏற்கனவே காவலில் இருந்த நாட்களைக் கழித்து எஞ்சிய 1,505 நாட்கள் சிறை தண்டனையை அவர் அனுபவிப்பார். மேலும், தனது டி.என்.ஏ (DNA) மாதிரிகளை வழங்க வேண்டும், 20 ஆண்டுகளுக்கு பாலியல் குற்றவாளிகள் தகவல் பதிவுச் சட்டத்திற்கு (Sex Offender Information Registration Act) உட்பட வேண்டும், பாதிக்கப்பட்ட பெண்ணைத் தொடர்பு கொள்ளக்கூடாது, மற்றும் ஆயுள் முழுவதும் தடைசெய்யப்பட்ட துப்பாக்கிகளை வைத்திருக்கக் கூடாது எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.