சென்னை
தமிழ் மொழியில் பேசுவது தொடர்பான விவகாரத்தில் தனது ஆவேசமான பேச்சுக்கு வருத்தம் தெரிவித்த நிதியமைச்சர் மரிய வில்சன், தவறுகளைத் திருத்திக்கொண்டு வரும் நாட்களில் மாபெரும் ‘கம்பேக்’ கொடுப்போம் எனச் சட்டப்பேரவையில் நெகிழ்ச்சியாகத் தெரிவித்தார்.
“தவறுகளைத் திருத்தி கம்பேக் கொடுப்போம்”:
தமிழக பட்ஜெட் மீதான விவாதத்திற்கு இன்று பதிலளித்துப் பேசிய நிதியமைச்சர் மரிய வில்சன், “தமிழ் மொழியில் பேசுவதில் எனக்கும் சில சிரமங்கள் உள்ளன. கடந்த வாரம் தமிழ் மொழி தொடர்பான விவகாரத்தில் நான் சற்று ஆவேசமடைந்தது உண்மைதான். நாங்கள் முதல்முறையாகச் சட்டப்பேரவையில் பேசி வருகிறோம். எங்கள் தவறுகளைத் திருத்திக்கொண்டு, உங்களிடமிருந்து சிலவற்றைக் கற்றுக்கொண்டு மீண்டும் வலிமையாக வருவோம்; வரும் நாட்களில் உறுதியாகக் ‘கம்பேக்’ கொடுப்போம்,” என்றார்.
பட்ஜெட் மற்றும் நிதி ஒதுக்கீடு குறித்த விளக்கம்:
தொடர்ந்து மாநிலத்தின் வரி வருவாய் மற்றும் செலவினங்கள் குறித்து உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அவர் விரிவான பதிலளித்தார்:
-
வரி வருவாய் சரிவு: “கடந்த ஜூன் மாதம் நாங்கள் வெளியிட்ட வெள்ளை அறிக்கையிலேயே, 2024-25 மற்றும் 2025-26 ஆண்டுகளில் மாநிலத்தின் சொந்த வரி வருவாய் வளர்ச்சி 8 சதவீதத்திற்கும் குறைவாகவே இருக்கும் எனத் தெளிவாகக் கூறியிருந்தோம். ஆனால், முந்தைய அரசு தங்களது மதிப்பீடுகளில் இதனை 19 சதவீதமாகக் காட்டியிருந்தது; நடைமுறைச் சூழலில் மிதமான வளர்ச்சியாக 12 சதவீதம் மட்டுமே சாத்தியம்.”
-
முக்கிய நிதி ஒதுக்கீடுகள்: “ஒன்றிய அரசின் VB-GRAM திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக ரூ.12,643 கோடி, மின்வாரியத்திற்கு 200 யூனிட் வரையிலான மின்கட்டணச் சலுகைக்காக ரூ.5,000 கோடி மற்றும் நிதி மாற்றம் என்ற தலைப்பின் கீழ் ரூ.18,000 கோடி கூடுதல் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.”
-
முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி: “இடைத்தரகர்கள் மூலம் வீணாகச் சென்ற நிதி மற்றும் திட்ட அனுமதிகளில் நடைபெற்று வந்த முறைகேடுகள் முழுமையாகத் தடுக்கப்பட்டுள்ளன. இதனால், பொதுமக்களுக்குப் பயனளிக்கும் புதிய திட்டங்களுக்குச் செலவிட முடிகிறது.”
பள்ளிக்கல்வித் துறை நிதி ஒதுக்கீடு:
“பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வித் துறைகளுக்கான ஒதுக்கீடுகள் திருத்தப்பட்ட வரவு-செலவு மதிப்பீடுகளில் குறைக்கப்பட்டதாகக் கூறப்படுவது முற்றிலும் தவறானது. கடந்த 2025-26 நிதியாண்டில் பள்ளிக்கல்வித் துறையின் உண்மையான செலவினம் ரூ.42,351 கோடியாக இருந்தது. ஆனால், நடப்பு 2026-27 ஆம் ஆண்டிற்கான மதிப்பீடு ரூ.48,531 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட ரூ.6,180 கோடி அதிகமாகும்,” என்று நிதியமைச்சர் மரிய வில்சன் புள்ளிவிவரங்களுடன் விளக்கமளித்தார்.
#MinisterMariaWilson #TNFinanceMinister #TNBudget2026 #TNAssembly #TVKGovernment #ChiefMinisterVijay #TNPolitics #TamilNaduNews #Chennai #ViralNewsTN #TrendingTN #LatestNewsTN #TNNewsUpdates