நச்சுக்கள், அபின்கள் மற்றும் ஆபத்தான மருந்துகள் கட்டளைச் சட்டத்தின் இரண்டு திருத்தச் சட்டமூலங்களையும் சாதாரண பெரும்பான்மையால் நிறைவேற்ற முடியும் என உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளதாக பிரதிச் சபாநாயகர் ரிஸ்வி சாலி பாராளுமன்றத்துக்கு அறிவித்துள்ளார்.
உயர் நீதிமன்றத்தின் வியாக்கியானத்தை பாராளுமன்றத்தில் அறிவித்த பிரதி சபாநாயகர், அரசியலமைப்பின் 121 (1) உறுப்புரையின் கீழ் சவாலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த 2026 ஆம் ஆண்டின் 79 ஆம் இலக்க நச்சுக்கள், அபின்கள் மற்றும் ஆபத்தான மருந்துகள் (திருத்த) சட்டமூலம் (LDO 8/2026) மற்றும் 2026 ஆம் ஆண்டின் 80 ஆம் இலக்க நச்சுக்கள், அபின்கள் மற்றும் ஆபத்தான மருந்துகள் (திருத்த) சட்டமூலம் (LDO 11/2026) ஆகியவற்றை உயர் நீதிமன்றம் பரிசீலித்ததாகத் தெரிவித்தார்.
இதில் 2026 ஆம் ஆண்டின் 79 ஆம் இலக்கச் சட்டமூலம், குழு நிலையின் போது குறிப்பிட்ட சில திருத்தங்களை மேற்கொள்வதற்கு உட்பட்டு, சாதாரண பெரும்பான்மையால் நிறைவேற்றப்படலாம் என உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
இந்தத் திருத்தங்களில், முன்மொழியப்பட்ட பிரிவு 77A(5) இல் மாற்றங்களை மேற்கொள்வதுடன், சந்தேகநபர் நீதிமன்றத்தில் முன்னிலையாதல் மற்றும் தொடர்புடைய அறிக்கைகள் சந்தேகநபரிடம் அல்லது அவரது சட்டத்தரணியிடம் கையளிக்கப்படும் திகதி தொடர்பான சொற்களைச் சேர்ப்பதும் அடங்கும்.
இதற்கிடையில், 2026 ஆம் ஆண்டின் 80 ஆம் இலக்கச் சட்டமூலம் அரசியலமைப்பின் எந்தவொரு ஏற்பாட்டிற்கும் முரணானது அல்ல என்றும், எனவே அதனைப் பாராளுமன்றத்தின் சாதாரண பெரும்பான்மையால் நிறைவேற்ற முடியும் என்றும் உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
உயர் நீதிமன்றத்தின் இந்தத் தீர்மானங்களை அன்றைய தினத்தின் உத்தியோகபூர்வ பாராளுமன்ற நடவடிக்கைகளின் அறிக்கையில் உள்ளடக்குமாறும் பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலி மேலும் பணிப்புரை விடுத்தார்.