ரொறன்டோ ஒன்டாறியோ – வட கிழக்கு ஸ்காபரோவில் நீண்ட காலமாக எதிர்பார்க்கப்படும் தமிழ்ச் சமூக மையத்தின் கட்டுமானப் பணிகளில் ஏற்பட்ட முன்னேற்றத்தைக் குறிக்கும் வகையில் மூன்று நிலை அரசுகளும் சேர்ந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் இன்று ஒன்றுகூடி விடுத்த அறிவித்தலின் ஊடாக தமிழ்ச் சமூக மையம் தனது கட்டுமானத் திட்டமிடலில் மற்றொரு முக்கிய மைல்கல்லை அடைந்துள்ளது.
இம்மாத தொடக்கத்தில் ஸ்காபரோ சமூக மன்றத்தால் தமிழ்ச்சமூக மையத்தின் உத்தியோகபூர்வ திட்ட வரைவு மற்றும் பயன்பாட்டு மாற்றத்திற்கான உபவிதி மாற்றங்கள் ஆகியவற்றுக்கு ஒரு மனதாக ஒப்புதல் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த நிகழ்வு நடைபெறுகின்றது. இந்த விண்ணப்பங்கள் இம்மாத இறுதியில் ரொறன்டோ மாநகர சபையில் கலந்துரையாடப்பட்டு இறுதித் தீர்மானம் எடுக்கப்படும். இது எமது திட்டத்தைக் கட்டுமான நிலைக்கு மேலும் ஒரு படி நெருக்கமாகக் கொண்டு செல்கின்றது.
நேற்றைய தினம் கனடாவில் மாநகர முதல்வர் ஒலிவியா சௌ அவர்கள் ஜுலை 29 – 31 திகதிகளில் நடைபெறவுள்ள ரொறன்டோ மாநகரசபைக் கூட்டத்திற்கு தாக்கல் செய்யவுள்ள ஒரு முன்மொழிவு மூலம் இத்திட்டத்தை விரைவுபடுத்த உதவும் இரண்டு முக்கிய நடவடிக்கைகளையும் அறிவித்தார்.
1. நீண்டகாலக் குத்தகை நீடிப்பு: 251 ஸ்டெயின்ஸ் வீதியில் அமைந்துள்ள காணிக்கான தமிழ்ச் சமூக மையத்தின் குத்தகைக் காலத்தை 30 ஆண்டுகளில் இருந்து 50 ஆண்டுகளாக நீட்டிக்க இந்த முன்மொழிவு அமையும். இது சமூகத்திற்கு நீண்ட கால உறுதிப்பாட்டை வழங்குவதோடு இத்திட்டத்தின் நிலையான தன்மையையும் வலுப்படுத்தும்.
2. விண்ணப்பக் கட்டண விலக்கு: இவ்வாண்டின் பிற்பகுதியில் சமர்ப்பிக்கப்படவுள்ள தமிழ்ச்சமூக மையத்தின் தளத் திட்ட ஒப்புதல் விண்ணப்பக் கட்டணங்களை விலக்களிப்பதற்கு நகர சபையின் ஒப்புதலை இந்த முன்மொழிவு கோரும். இத்திட்டத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் உத்தியோக பூர்வ திட்ட வரைவு மற்றும் பயன்பாட்டு மாற்றத்திற்கான உபவிதி மாற்றங்களுக்கான விண்ணப்பக் கட்டணமான சுமார் 88,000 டொலர்களை விலக்களிப்பதாக நகர சபை எடுத்த முந்தைய தீர்மானத்தின் தொடர்ச்சியாக இது அமைகின்றது.
திட்டமிடல் ஒப்புதல் நடைமுறைகள் மற்றும் இறுதித் தளத்திட்ட ஒப்புதல் நிறைவடைந்ததைத் தொடர்ந்து அடுத்த ஆண்டு கட்டுமானம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.