சென்னை:
மத்திய கல்வி அமைச்சராக இருந்த தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ததை தொடர்ந்து சென்னையில் போராட்டக்காரர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை தியாகராய நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகமான பாலன் இல்லத்தில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சிக்கு ஆதரவுத் தெரிவித்தும், நீட் தேர்வு ரத்து மற்றும் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி கடந்த ஆறு நாட்களாக தொடர்ந்து மாணவர் அமைப்புகள் போராட்டம் நடத்தி வந்தனர். இந்த போராட்டத்திற்கு திரைப்பிரபலங்கள், திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகளும் நேரில் சென்று ஆதரவு தெரிவித்திருந்தனர். போராட்டம் நாடு முழுவதும் தீவிரமடைந்த நிலையில், கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் பிரதிநிதிகளுடன் மத்திய அமைச்சர்கள் ஜெ.பி.நட்டா, ஜிதேந்திர சிங் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் என்பதில் அக்கட்சி உறுதியாக இருந்த நிலையில், மத்திய அரசுக்கு 24 மணி நேரம் கால அவகாசத்தை வழங்கியிருந்தது.
இந்த நிலையில், இன்று (ஜூலை 25) பிற்பகலில் தர்மேந்திர பிரதான் தனது மத்திய கல்வி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, சென்னையில் போராட்டக்காரர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ததன் மூலம் ஜனநாயக முறையில் வெற்றி பெற்றதாகவும், இசை வாத்தியங்களை முழங்கியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். சென்னையில் எழும்பூர் ராஜரத்தினம் அரங்கம் அருகே மாணவர் சங்கம் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநில செயலாளர் கார்த்திக், \”நீட் வினாத்தாள் கசிவிற்கு காரணமான மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகியது மாணவர் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி; இருப்பினும் எங்களுடைய அடுத்த இரண்டு கோரிக்கைகளான உயிரை மாய்த்துக் கொண்ட மாணவர்களின் குடும்பங்களுக்குத் தலா ரூபாய் 1 கோடி வழங்க வேண்டும். நாடாளுமன்றத்தை நோக்கி அமைதியாக பேரணி சென்ற மாணவர்கள் மீது கொடூரமாகத் தடியடி நடத்திய டெல்லி காவல்துறை அதிகாரிகள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் போன்ற கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும். இந்த இரண்டு கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை போராட்டம் தொடரும்\” என்று தெரிவித்துள்ளர். அதேபோல், டெல்லி உள்பட நாடு முழுவதிலும் இளைஞர்கள், மாணவர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
#DharmendraPradhan #Resignation #Chennai #NeetExam #StudentProtest #TamilNadu #TamilNews #BMNews #PoliticalUpdate #BreakingNewsTN #TamilNaduPolitics #CentralGovt #StudentRights #TamilNewsLive