தமிழ் பேசும் மக்களின் பொதுவான பிரச்சினைகளில் ஒன்றிணைந்து செயற்பட இம்மாதத் தொடக்கத்தில் தீர்மானித்த ஆறு தமிழ் பேசும் அரசியல் கட்சிகளின் தலைவர்களும் பிரதிநிதிகளும் நாடாளுமன்ற வளாகத்தில் சந்தித்துப் கலந்துரையாடியுள்ளனர். இதன்போது, தமிழ் பேசும் சமூகங்களைப் பாதிக்கும் பொதுவான விவகாரங்களில் கூட்டுப் பொறுப்புடன் செயற்படுவதற்கான தங்களின் உறுதிப்பாட்டை அவர்கள் மீண்டும் வலியுறுத்தினர்.
ஒவ்வொரு கட்சியும் சுயாதீனமாக இயங்கும் என்றும், தத்தமது அரசியல் நிலைப்பாடுகள், கொள்கைகள் மற்றும் தனித்துவத்தைத் தக்கவைத்துக்கொள்ளும் என்றும் உறுதியளிக்கப்பட்ட அதேவேளையில், ஆக்கப்பூர்வமான அரசியல் ஈடுபாட்டின் மூலம் தமிழ் பேசும் மக்களின் நலன்களை முன்னோக்கி எடுத்துச் செல்வதற்காக, பொதுவான உடன்பாடு உள்ள விவகாரங்களில் இணைந்து செயற்பட நேற்றைய தினம் (24) இக்கட்சிகள் ஒப்புக்கொண்டன.
இலங்கைத் தமிழரசுக்கட்சியின் (ITAK) நாடாளுமன்ற உறுப்பினரும், இக்குழுவின் ஒருங்கிணைப்பாளருமான சாணக்கியன் இராசமாணிக்கம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் (ACMC), இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் (CWC), ஜனநாயகத் தமிழ் தேசியக் கூட்டமைப்பு (DTNA), இலங்கைத் தமிழரசுக்கட்சி (ITAK), ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் (SLMC) மற்றும் தமிழ் முற்போக்குக் கூட்டணி (TPA) ஆகிய கட்சிகளின் சார்பில் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தீர்மானத்திற்கு அமைய, தமிழ் பேசும் சமூகங்களைப் பாதிக்கும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பல விவகாரங்கள் குறித்துக் கலந்துரையாடுவதற்காக, இலங்கைச் ஜனநாயக சோசலிசக் குடியரசின் ஜனாதிபதியிடம் சந்திப்பிற்கான நேரத்தைக் கோரி பிரதிநிதிகள் உத்தியோகபூர்வமாகக் கடிதம் எழுதியுள்ளனர்.
ஜனாதிபதியுடனான சந்திப்பைத் தொடர்ந்து, எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் இராஜதந்திர சமூகத்தின் பிரதிநிதிகளையும் சந்தித்து இதுகுறித்து கருத்துக்களைப் பரிமாறிக்கொள்ளவும், ஆக்கப்பூர்வமான ஜனநாயக அணுகுமுறையின் மூலம் பொது உடன்பாட்டை எட்டுவதற்கான முயற்சிகளைத் தொடரவும் பிரதிநிதிகள் திட்டமிட்டுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தங்களது கோரிக்கைக்கு நேர்மறையான பதில் கிடைக்கும் என எதிர்பார்ப்பதாகத் தெரிவித்துள்ள அப்பிரதிநிதிகள், நீதியான, அமைதியான மற்றும் நிலையான அரசியல் தீர்வை நோக்கிப் பயணிக்கும் அதேவேளையில், பொது உடன்பாடு காணப்படும் பிரச்சினைகளில் தொடர்ந்தும் ஒருங்கிணைந்து செயற்பட உறுதியுடன் இருப்பதாகவும் மேலும் தெரிவித்துள்ளனர்