வலிகாமம் கிழக்கு பிரதேச சபையில் 53 தீபங்கள் ஏற்றி உணர்வுபூர்வ அஞ்சலி!கறுப்பு ஜூலை தமிழினப் படுகொலை நிகழ்வுகளையும், அதன்போது கொழும்பு வெலிக்கடைச் சிறைச்சாலையில் படுகொலை செய்யப்பட்ட குட்டிமணி, தங்கத்துரை, ஜெகன் உள்ளிட்ட 53 தமிழ் அரசியல் கைதிகளையும் நினைவுகூரும் அஞ்சலி நிகழ்வு, யாழ்ப்பாணம் வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தலைமைச் செயலகத்தில் உணர்வுபூர்வமாக இடம்பெற்றது.
பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தலைமையில் பிரதான ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பமாகின. அதனைத் தொடர்ந்து, உப தவிசாளர் தர்மலிங்கம் ஜனார்த்தனன் மற்றும் சபை உறுப்பினர்கள் இணைந்து, சிறையில் உயிர்த்தியாகம் செய்த 53 அரசியல் கைதிகளின் நினைவாக 53 தீபங்களை ஏற்றி சுடரஞ்சலி செலுத்தியதுடன் மலரஞ்சலியும் செலுத்தினர்.
இந்நிகழ்வில் பிரதேச சபை உறுப்பினரும் முன்னாள் அரச சேவையாளருமான செல்வதிசைநாயகம் தவநாயகம், “கறுப்பு ஜூலை – தமிழர் வரலாற்றில் மாறாத வடு” எனும் தலைப்பில் வரலாற்றுச் சான்றுகளுடன் நினைவுரை ஆற்றினார்.
மேலும், கறுப்பு ஜூலை வடுவையும் கோரத் தாண்டவத்தையும் வெளிப்படுத்தும் வரலாற்றுப் புகைப்படங்களின் கண்காட்சியும் சபை வளாகத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.