முல்லைத்தீவில் உள்ள ரோகிங்யா அகதிகளை ஐநா அமைப்பு சந்திப்பதற்கான அனுமதியை இலங்கை அரசாங்கம் வழங்க வேண்டும் என இலங்கைக்கான ஐநாவின் நிரந்தர வதிவிடப்பிரதிநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார்
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
உலக அகதிகள் தினத்தில், இலங்கையில் கட்டாயமாக இடம்பெயர்க்கப்பட்ட மக்களின் பக்கம் நாங்கள் நிற்கிறோம்; அவர்களின் துணிச்சல், பின்னடைவை எதிர்கொள்ளும் திறன் மற்றும் நிச்சயமற்ற சூழ்நிலையிலும் அவர்கள் கொண்டுள்ள தளராத நம்பிக்கை ஆகியவற்றை நாங்கள் மதிக்கிறோம்.
அகதிகள் மற்றும் புகலிடம் கோருபவர்களை (Asylum-seekers) பெருந்தன்மையுடன் வரவேற்றுத் தத்தமது சமூகங்களில் அரவணைத்து வரும் இலங்கை அரசாங்கத்திற்கும், உள்ளூர் மக்களுக்கும் எங்களது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். அத்துடன் அவர்களின் கண்ணியம் மற்றும் நல்வாழ்வை ஆதரிக்கும் பல பங்காளிகளுக்கும் எங்களது பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
எங்கள் பகிரப்பட்ட பொறுப்பு இத்துடன் முடிவடைந்து விடுவதில்லை; வீடுகளை விட்டு வலுக்கட்டாயமாக வெளியேற வேண்டிய கட்டாயத்திற்குள்ளான மக்கள், தங்களது வாழ்க்கையைக் கண்ணியத்துடன் வாழவும், சிறந்த எதிர்காலத்தைக் கட்டியெழுப்பவும் அவர்களுக்கு நிலையான தீர்வுகள் (Durable solutions) அவசரமாகத் தேவைப்படுகின்றன.
முல்லைத்தீவில் உள்ள ரோஹிஞ்சா (Rohingya) இன மக்களை அவசரமாகச் நேரில் சந்திப்பதற்கான அனுமதியை ஐநா அகதிகள் முகமைக்கு (UNHCR) வழங்குமாறும், அவர்களின் மனிதாபிமான தேவைகள், உதவிகள் மற்றும் சர்வதேசப் பாதுகாப்புத் தேவைகளை நிவர்த்தி செய்யும் பொருட்டு அவர்களைத் தடுப்புக் காவலிலிருந்து (Detention) உடனடியாக விடுதலை செய்யுமாறும் இலங்கை அதிகாரிகளுக்கு நாங்கள் அழைப்பு விடுக்கிறோம்.
நாட்டை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்திற்குள்ளான அனைத்து மக்களின் உரிமைகளையும் பாதுகாப்பதில் ஐக்கிய நாடுகள் சபை தனது அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துவதுடன், “யாரும் கைவிடப்படக் கூடாது” என்ற கொள்கையையும் மீண்டும் வலியுறுத்துகிறது