வடமாகாணத்தில் முன்னெடுக்கப்படும் அனைத்து அபிவிருத்தித் திட்டங்களின் விவரங்களும் கட்டாயமாக உத்தியோகபூர்வ இணையத்தளங்களில் காட்சிப்படுத்தப்பட வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வடக்கு மாகாண நிதி, திட்டமிடல், சட்டம் ஒழுங்கு, காணி, மின்சக்தி, வீடமைப்பு மற்றும் நிர்மாணம், சுற்றுலா, உள்ளூராட்சி, மாகாண நிர்வாகம், கிராம அபிவிருத்தி, வீதி அபிவிருத்தி, மோட்டார் போக்குவரத்து மற்றும் போக்குவரத்து அமைச்சின் மாதாந்த முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம், ஆளுநர் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை (16) நடைபெற்றது.
அதில் குறிப்பாக, தகவல் அறியும் உரிமைக்கான ஆணைக்குழுவின் வழிகாட்டல்களுக்கு அமைய, மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் அனைத்து அபிவிருத்தித் திட்டங்களின் விவரங்களும் கட்டாயமாக உத்தியோகபூர்வ இணையத்தளங்களில் காட்சிப்படுத்தப்பட வேண்டும் அறிவுறுத்தப்பட்டது.
இந்த விசேட மீளாய்வுக் கூட்டத்தில் வடக்கு மாகாண பிரதம செயலாளர், ஆளுநரின் செயலாளர், உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர், பிரதிப் பிரதம செயலாளர்கள் (நிர்வாகம், திட்டமிடல், நிதி, பொறியியல்), உள்ளூராட்சி ஆணையாளர், யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா மாநகர சபைகளின் ஆணையாளர்கள், காணி ஆணையாளர், நகர சபைகளின் செயலாளர்கள், வீதி அபிவிருத்தி, கிராமிய அபிவிருத்தி மற்றும் மோட்டார் போக்குவரத்துத் திணைக்களங்களின் பணிப்பாளர்கள், சுற்றுலா அபிவிருத்திப் பணியகத்தின் பணிப்பாளர், வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் பொது முகாமையாளர், வீதி அபிவிருத்தித் திணைக்கள மாவட்டப் பொறியியலாளர்கள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களின் செயலாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.