யாழ்ப்பாண மாநகர சபையின் ஆளுகைக்குட்பட்ட உணவகங்களில் விற்பனை செய்யப்படும் உணவுகளின் விலைகள், தரம் மற்றும் அளவுகள் தொடர்பாக ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு முறைமை அவசியம் என யாழ் மாநகர சபை உறுப்பினர் றீகன் இளங்கோ வலியுறுத்தியுள்ளார்.
யாழ்ப்பாண மாநகர சபையின் மாதாந்த அமர்வு இன்று நடைபெற்ற நிலையில், இது தொடர்பான பிரேரணையை சபையில் முன்வைத்து உரையாற்றிய அவர், நகரிலுள்ள பல உணவகங்களில் உணவுகள் அளவுக்கு மீறிய விலைகளில் விற்பனை செய்யப்படுவதாக சுட்டிக்காட்டினார்.
குறிப்பாக, கொத்து ரொட்டி, முட்டை ரொட்டி, பிரைட் ரைஸ் உள்ளிட்ட உணவுகளில் சேர்க்கப்படும் இறைச்சி மற்றும் கடலுணவுகளின் அளவு மிகவும் குறைவாக இருப்பதாகவும், விலையை உயர்த்திய உணவக உரிமையாளர்கள் உணவின் தரம் மற்றும் உள்ளடக்க அளவுகள் தொடர்பில் அக்கறை காட்டுவதில்லை என்ற குற்றச்சாட்டும் மக்களிடையே காணப்படுவதாகவும் தெரிவித்தார்.
மேலும், ஒரே வகை உணவுகள் வெவ்வேறு உணவகங்களில் வெவ்வேறு விலைகளில் விற்பனை செய்யப்படுவதாகவும், இதனை கட்டுப்படுத்த யாழ் மாநகர சபை நடவடிக்கை எடுத்து, விலை மற்றும் தரம் தொடர்பில் ஒரே சீரமைப்பை உருவாக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.
இந்த பிரேரணை தொடர்பாக சபை உறுப்பினர்களிடையே விரிவான விவாதம் இடம்பெற்றது. உணவுகளின் விலை, தரம் மற்றும் அளவுகள் கண்காணிக்கப்படுவது அவசியம் என பலரும் வலியுறுத்தினர்.
அதேவேளை, உணவகங்கள் பயன்படுத்தும் அரிசி வகைகள் மற்றும் பிற உள்ளீட்டு பொருட்களில் காணப்படும் வேறுபாடுகள் காரணமாக விலைகளில் மாற்றம் ஏற்படுவது இயல்பானது என்றும், உணவகங்களின் தரநிலைகளுக்கு ஏற்ப விலைகளிலும் உணவின் தரத்திலும் வேறுபாடுகள் காணப்படலாம் என்றும் கருத்துகள் முன்வைக்கப்பட்டன.
இதனையடுத்து, உணவகங்களின் விலை மற்றும் தர கட்டுப்பாடு தொடர்பான விடயம் நுகர்வோர் அதிகார சபை மற்றும் உணவுக் கட்டுப்பாட்டு அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, அடுத்தகட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என சபையில் அறிவிக்கப்பட்டது