இலங்கையர்களின் உயிரியல் தரவுகளை கொண்ட டிஜிட்டல் அடையாள அட்டையை தயாரிக்கும் விலை மனுக்கோரல் கறுப்புப் பட்டியலில் உள்ள வெளிநாட்டு நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன் மூலம் சர்வதேச தரவு கடத்தல் இடம்பெற வாய்ப்புள்ளதாக தேசிய தொழிற்சங்க மற்றும் சிவில் முன்னணியின் அழைப்பாளர் விசேட வைத்திய நிபுணர் சமல் சஞ்சீவ தெரிவித்தார்.
நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை வலியுறுத்தினார்.
“டிஜிட்டல் அடையாள அட்டைகளைத் தயாரிக்கும் செயல்முறையை இந்த நிறுவனத்திடம் ஒப்படைப்பதன் மூலம், இலங்கை மக்களின் இரத்த வகை முதல் அனைத்துத் தரவுகளையும் கையாளும் அதிகாரம் அந்த வெளிநாட்டு நிறுவனத்திற்குச் கிடைக்கும்.
இது பாரிய ஆபத்தை உருவாக்கும். இந்தத் திட்டத்தை முன்னெடுப்பதற்குத் தேவையான பொறியியல் தொழில்நுட்பம் மற்றும் அறிவார்ந்த வசதிகள் இலங்கையிலேயே உள்ளது.
இருந்தபோதிலும், அவற்றை அலட்சியம் செய்துவிட்டு வெளிநாட்டு நிறுவனத்திற்கு வழங்குவது உள்நாட்டு அறிஞர்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகும்.
சுமார் 40 பில்லியன் ரூபாவிற்கும் அதிக மதிப்புடைய இந்தத் திட்டத்தில் ஏதேனும் தரவு மோசடியோ அல்லது நிதி முறைகேடோ இடம்பெற்றால், அது மீண்டும் சரி செய்ய முடியாத ஒரு பாரிய தவறு என்றும் விசேட வைத்திய நிபுணர் சமல் சஞ்சீவ சுட்டிக்காட்டினார்.