வின்ட்சர் (Windsor) பகுதியில் இடம்பெற்ற வன்முறைத் தாக்குதல் மற்றும் மிரட்டிப் பணம் பறித்தல் சம்பவம் தொடர்பாகத் தேடப்பட்டு வரும் நபர் ஒருவரைக் கண்டறிய பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
வின்ட்சர் பொலிஸ் சேவையின் தகவல்படி, 2024 ஜூலை மாதம் நடந்த ஒரு சம்பவம் தொடர்பாக 28 வயதான அல்வாசி அல் லத்தீப் (Alwassi Al Latif) என்பவர் மீது பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு அவர் தேடப்பட்டு வருகிறார்.
சந்தேக நபர் பாதிக்கப்பட்ட ஒருவரை வாகனத்தில் வலுக்கட்டாயமாக அடைத்து வைத்து, வேறொரு இடத்திற்கு அழைத்துச் சென்று தாக்கியதாக விசாரணையாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். இதன்போது பாதிக்கப்பட்டவர், அவரது குடும்பத்தினர் மற்றும் சொத்துக்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்துவதாக மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. அவர் விடுவிக்கப்படுவதற்கு முன்னர் அவரிடமிருந்து பணம் மற்றும் நகைகளும் பறிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சட்டவிரோதமாக அடைத்து வைத்தல், ஆயுதத்தால் தாக்குதல், உடல் ரீதியான காயங்களை ஏற்படுத்துதல், பலமுறை மிரட்டிப் பணம் பறித்தல் மற்றும் கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளை இவர் எதிர்கொண்டுள்ளார்.
குற்றம் நடந்ததாகக் கூறப்படும் காலப்பகுதியில், அல் லத்தீப் சில நிபந்தனைகளுடன் கூடிய தண்டனையை அனுபவித்து வந்துள்ளார். ஒன்டாரியோவை விட்டு வெளியேறக் கூடாது மற்றும் மின்னணு கண்காணிப்பு கருவியை (electronic monitoring) அணிந்திருக்க வேண்டும் என்பன அந்த நிபந்தனைகளாகும். எனினும், பின்னர் அவர் கண்காணிப்பு கருவி இன்றி மாகாணத்திற்கு வெளியே செல்ல அனுமதி வழங்கப்பட்டதாகவும், தற்போது அவர் இருக்குமிடம் தெரியவில்லை என்றும் பொலிஸார் கூறியுள்ளனர்.
அவர் சுமார் 5 அடி 8 அங்குல உயரம் (173 செ.மீ), 161 பவுண்டுகள் (73 கிலோ) எடை, கருப்பு முடி மற்றும் பழுப்பு நிற கண்களைக் கொண்ட மத்திய கிழக்கு நாட்டைச் சேர்ந்தவராக விவரிக்கப்பட்டுள்ளார்.
அவரைக் கண்டால் நெருங்க வேண்டாம் எனப் பொதுமக்களை எச்சரித்துள்ள பொலிஸார், இது குறித்த தகவல் தெரிந்தவர்கள் வின்ட்சர் பொலிஸாரைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.