மதுரை:
உலகப்புகழ் பெற்ற மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய அங்கமான கள்ளழகர் மதுரைக்கு எழுந்தருளும் வைபவம் இன்று தொடங்குகிறது. சைவ, வைணவ ஒற்றுமையை உலகுக்கு உணர்த்தும் இத்திருவிழாவில், அழகர் கோவிலிலிருந்து கள்ளழகர் இன்று மாலை கள்ளர் வேடம் தரித்து, தங்கப்பல்லக்கில் மதுரை நோக்கிப் புறப்படுகிறார். முன்னதாக நேற்றைய தினம் கள்ளழகருக்குக் காப்பு கட்டுதல் நிகழ்வு வேதமந்திரங்கள் முழங்க விமரிசையாக நடைபெற்றது. இன்று மாலை 6:00 மணி முதல் 6:15 மணிக்குள் அவர் மதுரையை நோக்கிக் கிளம்புகிறார்.
மதுரை நகருக்குள் வரும் அழகரை மக்கள் எதிர்கொண்டு அழைக்கும் ‘எதிர்சேவை’ நிகழ்வு நாளை (ஏப்ரல் 30) நடைபெற உள்ளது. விழாவின் சிகர நிகழ்ச்சியாக மே 1-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) சித்ரா பௌர்ணமி அன்று அதிகாலை 5:35 மணி முதல் 5:55 மணிக்குள் கள்ளழகர் தங்கக் குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் எழுந்தருள்கிறார். இதனைத் தொடர்ந்து மே 2-ஆம் தேதி மண்டூக முனிவருக்குச் சாப விமோசனம் அளித்தல் மற்றும் தசாவதாரக் காட்சிகள் நடைபெற உள்ளன. அழகர் மதுரைக்கு எழுந்தருளும் வாகனங்களான தங்கக்குதிரை, கருடன் மற்றும் சேஷ வாகனங்கள் ஏற்கனவே மதுரையில் உள்ள தல்லாகுளம் மற்றும் வண்டியூர் கோவில்களுக்கு டிராக்டர்கள் மூலம் கொண்டு வரப்பட்டுப் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. அழகரின் வருகையையொட்டி மதுரை மாநகர் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
#MaduraiChithiraiFestival #Kallalagar #VaigaiRiver #ChithiraiThiruvizha2026 #MaduraiNews #AzhagarKovil #SpiritualJourney #TamilCulture #Vetrivel #AlagarEntry #Vaigai2026 #MaduraiCity #Devotion #CulturalHeritage #BreakingNews #AlagarPurappadu #April29