மூன்று தசாப்தங்களாக தொடர்ந்து தமிழ்த் திரையுலகில் கவனிக்கத்தக்க படைப்புகளை வழங்கி ரசிகர்களை தொடர்ந்து உச்சகட்ட மகிழ்ச்சியில் ஆழ்த்தும் இயக்குநர் சசி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘நூறு சாமி’ திரைப்படத்தில்… இரண்டாம் பாதியில் தான் நாயகன் விஜய் அண்டனி வருவார். படத்தின் இறுதிக் கட்ட 40 நிமிடங்களில் அவர் தோன்றி ரசிகர்களின் மனதை கவர்வார்’ என அப்படத்தின் இயக்குநர் சசி தெரிவித்திருக்கிறார்.
இயக்குநர் சசி இயக்கத்தில் உருவாகி உள்ள ‘நூறு சாமி ‘ திரைப்படத்தில் விஜய் அண்டனி, சுவாசிகா, அஜய் திஷான், லிஜோ மோல் ஜோஸ், கருணாஸ், சக்தி, காவியா அனில், பாலாஜி சக்திவேல், அருள் தாஸ், மூர்த்தி, ஜென்சன் திவாகர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். எஸ். பி. தர்ஷன் கிர்லோஸ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு பாலாஜி ஸ்ரீராம் இசையமைத்திருக்கிறார்.
ஃபீல் குட் ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை விஜய் அண்டனி ஃபிலிம் கொர்ப்பரேசன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பாத்திமா அண்டனி தயாரித்திருக்கிறார். இந்த திரைப்படத்தை மீரா அண்டனி வழங்குகிறார்.
எதிர்வரும் 19 ஆம் திகதி முதல் உலகம் முழுவதும் படமாளிகையில் வெளியாகும் ‘நூறு சாமி’ திரைப்படத்தினை விளம்பரப்படுத்தும் வெளியீட்டுக்கு முன்னரான நிகழ்வு சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.
இதில் தமிழ் சினிமாவின் முத்திரை பதித்த முன்னணி நட்சத்திர இயக்குநர்களான வெற்றிமாறன் – பா. ரஞ்சித்- ஏ. ஆர். முருகதாஸ்- கார்த்திக் சுப்புராஜ் – மிஷ்கின் – ராஜூ முருகன் – இசையமைப்பாளர்கள் எஸ். எஸ். குமரன், சித்து குமார், தயாரிப்பாளர்கள் சி.வி. குமார் மற்றும் தனஞ்ஜெயன் உள்ளிட்ட பல திரையுலக பிரபலங்கள் சிறப்பு அதிதிகளாக பங்கு பற்றினர்.
இந் நிகழ்வில் படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், ” இப்படத்தின் கதையை தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஒரு நிகழ்சியில் பங்கு பற்றிய அம்மா மற்றும் மகன் இடையேயான உரையாடல் மூலம் உருவானது. இந்தப் படத்தின் இரண்டாம் பாதியில் தான் கதையின் நாயகனான விஜய் அண்டனி வருகிறார்.
அத்துடன் படத்தின் கடைசி 40 நிமிடங்களில் அவர் திரையில் தோன்றி, அவரது கதாபாத்திர மூலமாக ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடிப்பார். இந்த படத்தை பார்க்கும் ஒவ்வொரு ரசிகர்களும் படம் முடிந்த பிறகு தங்களது தாயை சக மனுஷியாக பார்ப்பார்கள்” என்றார்.