2019ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்தவர்களை நினைவு கூரும் வகையில், இன்று (21) காலை 8:45 மணிக்கு இலங்கை முழுவதும் உள்ள தேவாலயங்களில் மணிகள் ஒலிக்கச் செய்யப்பட்டு, அமைதியான முறையில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
பலியானவர்களை நினைவுகூரும் வகையில் தேவாலயங்களில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட நினைகூறல் நிகழ்வுகளின் ஒரு பகுதியாக இந்த நாடு தழுவிய மௌன அஞ்சலி அனுஷ்டிக்கப்பட்டது.
தாக்குதலுக்குள்ளான இடங்களில் ஒன்றான கொழும்பு, கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் மதத் தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் ஒன்று கூடி விசேட திருப்பலிகளை ஒப்புக்கொடுத்ததுடன், உயிரிழந்தவர்களின் நினைவாக மெழுகுவர்த்திகளை ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.
தேவாலயங்கள் மற்றும் சுற்றுலா ஹோட்டல்களை இலக்கு வைத்து தற்கொலை குண்டுதாரிகளால் நடத்தப்பட்ட இந்த கோரத் தாக்குதலில் குறைந்தது 250 பேர் கொல்லப்பட்டனர். அந்தத் துயரச் சம்பவம் இடம்பெற்று இன்றுடன் ஏழு ஆண்டுகள் நிறைவடைகின்றன.