பிராட்போர்ட் வெஸ்ட் கிவில்லிம்பரி (Bradford West Gwillimbury) பகுதியில் உள்ள குடியிருப்பு ஒன்றில், சிலர் துப்பாக்கிகள் போன்ற ஆயுதங்களை ஏந்திச் செல்வதைக் கண்ட குடியிருப்பாளர் ஒருவர் வழங்கிய தகவலையடுத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.
தெற்கு சிம்கோ (South Simcoe) பொலிஸாரின் கூற்றுப்படி, ஞாயிற்றுக்கிழமை இரவு 9:30 மணியளவில் நான்கு ஆண்கள் குட்டையான துப்பாக்கிகள் (Short-barreled rifles) போன்றவற்றை வைத்திருப்பதாகக் கிடைத்த புகாரைத் தொடர்ந்து அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
குறித்த கும்பல் பின்னர் ஒரு கறுப்பு நிற செடான் (Black sedan) காரில் ஏறி அந்தப் பகுதியிலிருந்து தப்பிச் சென்றனர். எனினும், பொலிஸார் அந்த வாகனத்தைப் பின்தொடர்ந்து சென்று கார்ட்டர் வீதியில் (Carter Street) வைத்து வழிமறித்தனர்.
நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், அவை உண்மையான துப்பாக்கிகள் அல்ல என்பதும், அவை ‘ஏர் ரைபிள்கள்’ (Air rifles) என்பதும் உறுதி செய்யப்பட்டது. அந்த நபர்கள் விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைப்பு வழங்கியதையடுத்து அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
இது போன்ற சந்தேகத்திற்கிடமான சம்பவங்கள் குறித்து பொதுமக்கள் உடனடியாகத் தகவல் வழங்குவது மிகவும் முக்கியமானது என அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர். “பொது இடங்களில் இத்தகைய போலி துப்பாக்கிகள் அல்லது ஏர் ரைபிள்களைக் கையாள்வது பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தும்” என்று பொலிஸார் பொதுமக்களுக்கு நினைவூட்டியுள்ளனர்.