வட இந்திய மாநிலமான அசாம் – தென்னிந்திய மாநிலமான கேரளம் மற்றும் யூனியன் பிரதேசமான புதுச்சேரி ஆகிய மூன்று மாநிலங்களில் நடைபெறும் பொது தேர்தலை முன்னிட்டு, அரசியல் கட்சிகளின் பிரச்சாரம் நேற்றுடன் (7)நிறைவடைந்தது. இந்த மூன்று மாநிலங்களிலும் நாளை (9)வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
வட இந்திய மாநிலமான அசாம் மாநிலத்தில் ஆளும் கட்சியான பாஜகவிற்கும், எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சிக்கும் இடையே நேரடியான போட்டி ஏற்பட்டிருக்கிறது. மொத்தம் உள்ள 126 தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பாஜக 89 தொகுதிகளிலும், அதன் கூட்டணி கட்சியான அசாம் கண பரிஷத் 26 தொகுதிகளிலும், போடோ லேண்ட் மக்கள் முன்னணி 11 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.
இந்த மாநிலத்தில் இந்தியா கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி 95 தொகுதிகளிலும், அதன் கூட்டணி கட்சியான ராய் ஜோர் தள் 16 தொகுதிகளிலும் , அசாம் ஜாதிய பரிஷத் கட்சி 10 தொகுதிகளிலும், மீதமுள்ள தொகுதிகளில் கம்யூனிஸ்ட் கட்சிகளும் போட்டியிடுகின்றது.
இந்த இரண்டு கூட்டணியை தவிர்த்து மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 23 தொகுதிகளிலும், ஹேமந்த் சோரன் தலைமையிலான ஜார்க்கண்ட் முக்தி மோட்சா கட்சி 21 தொகுதிகளிலும், அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி 14 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி ஆகியோர் தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டு வாக்காளர்களை சந்தித்தனர்.
தென்னிந்திய மாநிலமான கேரளம் மாநிலத்தில் மொத்தம் உள்ள 140 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நாளை ஒரே கட்டமாக நடைபெறுகிறது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணிக்கும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கும் இடையே கடும் போட்டி ஏற்பட்டிருக்கிறது. இதில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியும் களத்தில் குதித்திருப்பதால் பல தொகுதிகளில் மும்முனைப் போட்டி ஏற்பட்டிருக்கிறது.
கேரளத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 86 தொகுதிகளிலும், காங்கிரஸ் கட்சி 95 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. பாஜக 115 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
பாஜக கட்சிக்கு வாக்காளர்கள் இடத்தில் ஆதரவு இருந்தாலும் கம்யூனிஸ்ட் – காங்கிரஸ் கட்சிக்கு இடையே தான் நேரடியான மோதல் நடைபெறுகிறது. காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டனர். பாஜக சார்பில் உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் பொதுக்கூட்டத்தில் பங்கு பற்றி தங்கள் கட்சிக்கு ஆதரவு திரட்டினர்.
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் ஆளுங்கட்சியான என்.ஆர். காங்கிரஸ் மற்றும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிக்கும், காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி கட்சிக்கும் நேரடியான போட்டி நிலவுகிறது. இங்கு புதிதாக தமிழக அரசியல் களத்தில் இறங்கி பாரிய அதிர்வை ஏற்படுத்தி வரும் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 30 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தி இருக்கிறது. சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி 28 தொகுதிகளில் தனித்து போட்டியிடுகிறது. பிரதான அரசியல் கட்சிகளில் போட்டியிடுவதற்கு வாய்ப்பு கிடைக்காத கட்சியின் பிரபலங்கள் பலர் பல தொகுதிகளில் சுயேட்சையாக போட்டியிடுகிறார்கள். விஜய், ராகுல் காந்தி, மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி, பிரதமர் மோடி, அமித்ஷா ஆகியோர் வீதி நிகழ்வுகள் மற்றும் பொதுக் கூட்டங்கள் மூலம் தங்கள் கட்சிக்கும், கூட்டணி கட்சியினரின் வேட்பாளர்களுக்கும் ஆதரவு திரட்டினர்.
மூன்று மாநிலங்களிலும் பொதுத் தேர்தலுக்காக நடைபெற்று வந்த தேர்தல் பிரச்சாரம் நேற்றுடன் முடிவடைந்து இருக்கிறது. இந்த மூன்று மாநிலங்களிலும் ஒரே கட்டமாக நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
அசாம், கேரளம், புதுச்சேரி யூனியன் பிரதேசம் ஆகிய மூன்று மாநிலங்களில் நடைபெறும் சட்டப்பேரவைக்கான பொது தேர்தலில் மக்கள் யாரை தெரிவு செய்வார்கள் என்பது எதிர்வரும் மே மாதம் 4ஆம் திகதி நடைபெறும் வாக்கு எண்ணிக்கைக்கு பிறகு அதிகாரபூர்வமாக தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது.