பேருவளைக்கு அப்பால் உள்ள ஆழ்கடல் பகுதியில் இலங்கை கடற்படையினரின் கண்காணிப்பு நடவடிக்கையின் போது, போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட 6 மீனவர்களையும் தடுத்து வைத்து விசாரணை செய்ய நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
சம்பந்தப்பட்ட மீனவர்கள் இன்று (02) கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு புலனாய்வுத் தகவல் ஒன்றின் அடிப்படையில், இந்த மீனவர்கள் அவர்களின் பலநாள் மீன்பிடி படகுடன் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கடற்படையினரால் கண்டுபிடிக்கப்பட்டனர்.
பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட ஆரம்பகட்ட விசாரணையில், படகிலிருந்த 298 பொதிகளில் 323 கிலோகிராம் ஹெரோயின் இருந்தமை கண்டறியப்பட்டுள்ளது.
இந்த போதைப்பொருள் தொகையின் பெறுமதி 620 கோடி ரூபாவிற்கும் அதிகம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரானிய கப்பல் ஒன்றிலிருந்தே இந்த போதைப்பொருள் தொகை குறித்த படகிற்கு மாற்றப்பட்டுள்ளமை விசாரணைகளில் மேலும் தெரியவந்துள்ளது.