மனிதன் என்பது விலங்குக்கும் அதிமானிடனுக்கும் இடையே கட்டப்பட்ட ஒரு கயிறு. அத்தகைய பலவீனங்களாலும் எதிர்மறைச் சிந்தனைகளாலும் கட்டப்பட்ட அந்தக் கயிற்றை அறுத்து, நாம் அதிமானுடர்களாக நிமிர வேண்டும்” என மாணவர் சமுதாயத்தின் முன்னிலையில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.
ஜெர்மனியின் புகழ்பெற்ற தத்துவஞானி பிரீட்ரிக் நீட்ஷே (Friedrich Nietzsche) அவர்களின் புகழ்பெற்ற ‘அப்படியும் பேசினார் ஜரதுஸ்ட்ரா’ (Thus Spoke Zarathustra) என்னும் நூலில்
“மனிதன் என்பவன் ஒரு நிலையான உயிரினம் அல்ல. மனித நிலை என்பது ஒரு தற்காலிகப் புள்ளி. மனிதன் என்பது விலங்குக்கும் அதிமானிடனுக்கும் இடையே கட்டப்பட்ட ஒரு கயிறு. நாம் அக்கயிற்றின் மீதுதான் நின்று கொண்டிருக்கிறோம். நாம் பின்னோக்கிச் சென்று விலங்குத் தனத்தோடு வாழப் போகிறோமா அல்லது முன்னோக்கி நகர்ந்து ‘அதிமானிடன்’ ஆகப் போகிறோமா என்பது நம் கைகளில்தான் உள்ளது” என அவர் தெரிவித்தார்.
கிளிநொச்சி இராமநாதபுரம் மகா வித்தியாலயத்தின் தேசிய மட்ட நாடகச் சாதனையாளர் கௌரவிப்பு நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து, தேசிய மட்ட நாடகப் போட்டியில் தேசிய விருதுகளை வென்ற மாணவர்களுக்குப் பரிசில்கள் வழங்கி மதிப்பளிக்கப்பட்டது.
பாடசாலையின் முதல்வர் திரு. சிதம்பரநாதன் சிவானந்தம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், சிறப்பு விருந்தினர்களாக சமூக விஞ்ஞான உதவிக் கல்விப் பணிப்பாளர் திரு. துரைராசா ஜீவானந்தம், கிளிநொச்சி சாந்தபுரம் கலைமகள் வித்தியாலய முதல்வர் திரு. சிங்காரவேலு சிவலோகநாதன் ஆகியோரும், கௌரவ விருந்தினர்களாக ஓய்வு நிலை அதிபர் திரு. சதாசிவம் புண்ணியமூர்த்தி மற்றும் ஓய்வு நிலை அதிபர் திரு. சுப்பிரமணியம் நடராசா ஆகியோரும் கலந்து கொண்டனர்