யாழ்ப்பாண நகரின் பிரதான வீதியில் தமக்கு செருப்பு மாலை அணிவிக்கப்பட்டிருந்த பதாகையை (Banner) நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா இராமநாதன் தாமே கிழித்து, தனது காரில் எடுத்துச் சென்றுள்ளார்.
யாழ்ப்பாண நகரை அண்டிய பிரதான வீதியோரத்தில் வெள்ளிக்கிழமை (ஜூன் 19, 2026) சுயேச்சை நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா இராமநாதனின் உருவம் பொறிக்கப்பட்ட சுமார் 10 அடி உயர பதாகை ஒன்று இனந்தெரியாத நபர்களால் வைக்கப்பட்டிருந்ததுடன், அதற்கு செருப்பு மாலையும் அணிவிக்கப்பட்டிருந்தது.
யாழ்ப்பாணத்தில் அண்மையில் நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் அவர் சபை நாகரீகமின்றிச் செயற்பட்டதாகவும், தகாத வார்த்தைப் பிரயோகங்களை மேற்கொண்டு கூட்டங்களைக் குழப்பியதாகவும் தெரிவித்தே இந்த செருப்பு மாலை அணிவிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, வலிகாமம் வடக்கு பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கும் அருச்சுனா இராமநாதனுக்கும் இடையே ஏற்பட்ட கடுமையான வாக்குவாதத்தைத் தொடர்ந்தே இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இதனையறிந்த நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா இராமநாதன், சம்பவ இடத்திற்கு நேரில் சென்று செருப்பு மாலை அணிவிக்கப்பட்டிருந்த தனது பதாகையைத் தானே கிழித்து அகற்றியுள்ளார். பின்னர், கிழித்த பதாகையையும் செருப்பு மாலையையும் தனது காரில் ஏற்றிக்கொண்டு அவர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார்