இளவாலை பிரதேச வைத்தியசாலையில் மாணவன் ஒருவருக்கு சிகிச்சை அளிக்க மறுக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
கடந்த வியாழக்கிழமை இளவாலை பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றில் கற்கும் மாணவர் ஒருவர் திடீர் சுகவீனம் காரணமாக மயங்கி விழுந்துள்ளார். சிகிச்சைக்காக அவர் இளவாலை பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டபோது, அங்கு வைத்தியர்கள் கடமையில் இல்லை எனக் கூறி அவரை அனுமதிக்க ஊழியர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
அங்கிருந்த தாதியர்கள் முதலுதவி அளிக்க முன்வரவில்லை எனவும், தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமாறு கூறியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
வைத்தியசாலையில் நோயாளர் காவு வண்டி (Ambulance) இல்லாத காரணத்தினால், அந்த மாணவன் முச்சக்கர வண்டி மூலம் சுமார் 10 கிலோமீட்டர் தொலைவிலுள்ள தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டார்.
இச்சம்பவம் குறித்த செய்திகளின் அடிப்படையில், யாழ். பிராந்திய மனித உரிமைகள் ஆணைக்குழுவின் இணைப்பாளர் த. கனகராஜ் விசாரணைகளை முன்னெடுத்துள்ளார். இது குறித்து இளவாலை பிரதேச வைத்தியசாலையின் பொறுப்பதிகாரியிடம் விளக்கம் கோரப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் மார்ச் 30ஆம் தேதிக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.