இந்தியாவிலும் இலங்கையிலும் கூட்டாக நடத்தப்பட்டுவரும் பத்தாவது ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண அத்தியாயத்தில் ஒத்திகைக்கு ஒப்பான முதல் சுற்று ஆட்டங்கள் நிறைவடைந்துள்ள நிலையில் அடுத்த ரி20 உலக சம்பியன் பட்டத்தை சுவீகரிக்கும் குறிக்கோளுடன் எட்டு அணிகள் மோதும் உண்மையான போராட்டமாக உருவெடுக்கவுள்ள சுப்பர் 8 சுற்று ஆரம்பமாகியுள்ளது.
பாகிஸ்தானுக்கும் நியூஸிலாந்துக்கும் இடையில் ஆர். பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் நேற்று நடைபெறவிருந்த குழு 2க்கான சுப்பர் 8 போட்டி நாணய சுழற்சி க்கு பின்னர் தொடர்ச்சியாக பெய்து மழை காரணமாக முழுமையாக கைவிடப்பட்டது. இரண்டு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழகங்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, இலங்கைக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இதே குழுவுக்கான சுப்பர் 8 போட்டி கண்டி பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் இன்று பிற்பகல் 3.00 மணிக்கு ஆரம்பமாவுள்ளது.
இந் நிலையில் இலங்கை தனது சுப்பர் 8 ஆரம்பப் போட்டியில் இங்கிலாந்தை வெற்றிகொள்ளும் குறிக்கோளுடன் களம் இறங்கவுள்ளது.
இலங்கையும் இங்கிலாந்தும் 2012 ரி20 உலகக் கிண்ண சுப்பர் 8 சுற்றில் மோதிய போது லசித் மாலிங்க 31 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களைக் கைப்பற்றி இலங்கையை 19 ஓட்டங்களால் வெற்றி அடையச் செய்திருந்தார்.
இம்முறை மேற்கிந்தியத் தீவுகளுக்கு பதிலாக பாகிஸ்தான் நான்காவது அணியாக இலங்கை குழுவில் இடம்பெறுகிறது.
அந்தப் போட்டியில் இலங்கை அணியினர் சகலதுறைகளிலும் அற்புதமான ஆற்றல்களை வெளிப்படுத்தி வெற்றிவாகை சூடினர்.
மேலும் இந்த மைதானத்தில் முதலில் துடுப்பெடுத்தாடிய அணிகளுக்கே பெரும்பாலும் வெற்றிகிடைத்துள்ளது என்பதால் நாணய சுழற்சி இந்தப் போட்டியில் முக்கிய பங்கு வகிக்கவுள்ளது.
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் சதம் குவித்த பெத்தும் நிஸ்ஸன்க, இந்த சுற்றுப் போட்டியில் தொடர்ச்சியாக 3 அரைச் சதங்கள் பெற்ற குசல் மெண்டிஸ். தலா ஒரு அரைச் சதம் பெற்ற பவன் ரத்நாயக்க, அணித் தலைவர் தசுன் ஷானக்க ஆகியோருடன் குசல் ஜனித் பெரேரா, கமிந்து மெண்டிஸ் ஆகியோர் இன்றைய போட்டியில் கணிசமான ஓட்டங்களைப் பெற்று இலங்கையைப் பலப்படுத்துவார்கள் என நம்பப்படுகிறது.
அவர்களுடன் சகலதுறை வீரர்களான துனித் வெல்லாலகே, துஷான் ஹேமன்ற ஆகிய இருவரும் துடுப்பாட்டத்தில் சிறந்த பங்களிப்பை செய்வர் என எதிர்பார்க்கலாம்.