இந்த ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் 3,700 கிலோகிராமுக்கும் அதிகமான ‘ஐஸ்’ (Ice) போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாகப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எஃப். யூ. வுட்லர் தெரிவித்துள்ளார்.
இன்று (27) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இதற்கமைய, குறித்த காலப்பகுதியில் அதிக பெறுமதி வாய்ந்த போதைப்பொருட்களான ‘ஐஸ்’ 3,758 கிலோகிராமுக்கும் அதிகமாகவும், ஹெரோயின் 2,982 கிலோ கிராமுக்கும் அதிகமாகவும், கொக்கேய்ன் 303 கிலோகிராமுக்கும் அதிகமாகவும் கைப்பற்றப்பட்டுள்ளன.
அத்துடன், 11,328 கிலோ கிராமுக்கும் அதிகமான கஞ்சாவும் பொலிஸ் பொறுப்பில் எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், சமூகத்திற்குள் புழக்கத்தில் உள்ள போதை மாத்திரைகள் மற்றும் கெப்சூல்கள் தொடர்பிலும் பொலிஸார் விசேட கவனம் செலுத்தியுள்ளதாகப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சுட்டிக்காட்டினார்.
சிறுவர்களைப் போதைப்பொருளுக்கு அடிமையாக்கும் நோக்கில் இந்த போதை வில்லைகள் சமூகத்திற்குள் விநியோகிக்கப்படுவதாகத் தெரிவித்த அவர், 45 இலட்சத்துக்கும் அதிகமான போதை வில்லைகளை இலங்கைப் பொலிஸார் கைப்பற்றி, அது தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் கூறினார்.
இவ்வாறு கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை அழிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
இதேவேளை, 2025 ஒக்டோபர் 30ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட முழுநாடுமே ஒன்றாக விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் கீழ் நேற்று (26) வரை 21 வயதுக்குட்பட்ட 11,737 இளைஞர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன், 18 முதல் 21 வயதுக்குட்பட்ட 233 யுவதிகளும் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.