உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் இடம்பெற்று ஏழு ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், பாதிக்கப்பட்டவர்களை நினைவுகூரும் வகையில் இன்று (21) நாடு தழுவிய ரீதியில் விசேட மத வழிபாடுகள் நடத்தப்படுகின்றன.
கத்தோலிக்க திருச்சபையின் ஊடகப் பேச்சாளர் அருட்தந்தை ஜூட் கிரிஷாந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளதாவது, இன்று காலை நாட்டின் அனைத்து தேவாலயங்களிலும் விசேட நினைவேந்தல் நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
உயிரிழந்தவர்களின் நினைவாக தேவாலய மணிகள் ஒலிக்கச் செய்தல், இரண்டு நிமிட மௌன அஞ்சலி, மெழுகுவர்த்திகள் அல்லது விளக்குகள் ஏற்றுதல் மற்றும் விசேட பிரார்த்தனை வழிபாடுகள் என்பன இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் திருத்தலத்தில் பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தலைமையில் விசேட திருப்பலி நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு அந்தப் பகுதியில் விசேட போக்குவரத்துத் திட்டம் அமுல்படுத்தப்படும் எனவும், காலை 7:00 மணி முதல் ஆராதனைகள் நிறைவடையும் வரை வாகனப் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படும் எனவும் பொலிஸார் அறிவித்துள்ளனர்.
இதேவேளை, கட்டுவாப்பிட்டி புனித செபஸ்தியான் தேவாலயத்திலும் விசேட ஆராதனைகள் நடைபெறவுள்ளன.
மேலதிகமாக, இன்று மாலை 4:00 மணியளவில் நீர்கொழும்பு மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி மைதானத்தில் இருந்து ஆயர்கள், குருக்கள் மற்றும் பொதுமக்களின் பங்கேற்புடன் பிரார்த்தனை நடைபவனி ஒன்று ஆரம்பமாகவுள்ளது. இந்த ஊர்வலம் கட்டுவாப்பிட்டி புனித செபஸ்தியான் தேவாலய வளாகத்தை சென்றடைந்ததும் நிறைவடையும்.