2024.09.21 ஆம் திகதி முதல் முதல் 2026.01.26 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் போதைப்பொருட்கள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட செயல்களில் ஈடுபட்டவர்களில் 10 பேரின் சொத்துக்கள் நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைய முடக்கப்பட்டு அரசுடமையாக்கப்பட்டுள்ளன. ‘கெஹெல்பத்தர பத்மே’ உள்ளிட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளின் பல சொத்துக்களும் அடங்குவதாக பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (20) நடைபெற்ற அமர்வில் வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையின் போது ஆளும் தரப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ரவீந்திர பண்டார முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,
2024.09.21 ஆம் திகதி முதல் 2026.01.26 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 1468.061 கிலோகிராம் ஹெரோயின், 5344.954 கிலோகிராம் கஞ்சா / கேரள கஞ்சா, 39.369 கிலோகிராம் கொக்கைன் , 832.319 ஹஷிஸ் / குஷ், 3022.258 கிலோகிராம் ஐஸ்,
663033 போதை குழிசைகள்/ காப்ஸ்யூல்கள்,ஏனையவை 10706.9961 கிலோகிராம் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.இக்காலப்பகுதிகளில் போதைப்பொருள் குற்றச்சாட்டில் 5524 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
சட்டவிரோதமான முறையில் ஈட்டப்பட்ட சொத்துக்கள் மற்றும் ஆதனங்களை நீதிமன்றத்தின் ஊடாக முடக்குவதற்கு பிரத்தியே சட்டம் இயற்றப்பட்டுள்ளது. அதற்கமைய உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்றார்.