ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி (CEO) கபில சந்திரசேன, கொள்ளுப்பிட்டியிலுள்ள அவரது இல்லத்தில் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்ட பிணை நிபந்தனைகளை மீறி, பொருத்தமற்ற பிணையாளர்களைச் சமர்ப்பித்த குற்றச்சாட்டின் பேரில், கொழும்பு பிரதம நீதவான் அசங்க எஸ். போதராகமவினால் சந்திரசேனவைக் கைது செய்யுமாறு பிடியாணை பிறப்பிக்கப்பட்ட மறுநாளே இந்தச் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, சந்திரசேனவுக்கு வழங்கப்பட்ட பிணையை ரத்துச் செய்து, வழக்கு விசாரணை முடிவடையும் வரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்திருந்தது.
முன்னாள் ஏர்லைன்ஸ் தலைவர் பிணை நிபந்தனைகளை மீறியுள்ளதாகவும், தகுதியற்ற இருவரைப் பிணையாளர்களாக நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியதன் மூலம் நீதிமன்றம் அவர் மீது வைத்த நம்பிக்கையை மீறியுள்ளதாகவும் ஆணைக்குழு குற்றம் சுமத்தியிருந்தது.
இந்த மரணம் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.