சென்னை:
குழந்தைகள் தின விழாவில் வழங்கப்பட்ட கேக்கில் முதலமைச்சர் விஜய்யின் படம் இடம்பெற்றதையும், விலையில்லா சைக்கிள் கொள்முதல் திட்டத்தில் நடைபெற்றுள்ள மெகா ஊழலையும் முன்னாள் சபாநாயகர் அப்பாவு மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் பல சரமாரியான கேள்விகளை எழுப்பியுள்ளார்.
ஸ்டிக்கர் அரசியல்:
முன்னாள் சபாநாயகர் அப்பாவு வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், “நேரு பிறந்தநாளான நவம்பர் 14 அன்று தமிழக அரசால் மாணவ மாணவிகளுக்கு வழங்கப்பட்ட கேக்கில் நேருவின் படம் இல்லாமல் விளம்பரத்திற்காக உங்கள் படம் போட்டுக் கொடுத்திருக்கிறீர்களே! நினைவிருக்கிறதா? ஊரான் வீட்டு நெய்யில் உங்கள் ஸ்டிக்கர் ஒட்டலாமா முதலமைச்சர் விஜய்? தமிழ்நாட்டு மாணவ மாணவிகளுக்கு உங்கள் படம் போட்ட கேக் முக்கியமல்ல. தவெக கட்சிக்காரர்கள் அனைத்துப் பள்ளிகளிலும் மாணவ மாணவிகளுக்குக் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளை உங்கள் படம் இல்லாமல் விற்பனை செய்வதை முதலமைச்சர் விஜய் முதலில் தடுத்து நிறுத்த உறுதியான நடவடிக்கை எடுப்பீர்களா?” என்று அவர் சரமாரியாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.
சைக்கிள் கொள்முதல் ஊழல்:
தொடர்ந்து அவர், “தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் சுமார் 5 லட்சம் மாணவ மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் திட்டத்தில் மாணவர் சைக்கிள் ஒன்றிற்கு 7,235 ரூபாய் என்றும், மாணவி சைக்கிள் ஒன்றிற்கு 7,476 ரூபாய் என்றும் அதிக விலைக்குக் கொள்முதல் செய்ய 3 நிறுவனங்களுக்கு நள்ளிரவில் உத்தரவு பிறப்பித்தது உங்களுக்கு நினைவிருக்கிறதா முதலமைச்சர் விஜய்? ஆனால், தற்போது அதே கோட்டையில் அதிகாரிகளோடு அமர்ந்து அதே சைக்கிளை 5,130 ரூபாய் மற்றும் 5,260 ரூபாய் என மிகவும் குறைந்த விலைக்குக் கொள்முதல் செய்ய என்ன காரணம்?” என்று அவர் கேட்டுள்ளார்.
நடவடிக்கை பாயுமா?:
மேலும் அவர் கூறுகையில், “அன்று 115 கோடி ரூபாய் அளவுக்கு அதிக விலையில் கொள்முதல் செய்ய நள்ளிரவில் உத்தரவிட்டது மெகா ஊழல் தானே? இந்த மாபெரும் ஊழல் குறித்து உடனடியாக வழக்குப்பதிவு செய்து, ஊழலில் ஈடுபட்டவர்கள் மீது தயவுதாட்சண்யமின்றி கடுமையான நடவடிக்கை எடுக்கத் தூய ஆட்சி என்று சொல்லிக்கொள்ளும் உங்களது அரசு முன்வருமா?” என்று நேரடியாகச் சவால் விடுத்துள்ளார்.