மதுரை:
மேகதாது அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு ஒன்றிய அரசு ஒருபோதும் அனுமதி அளிக்கக் கூடாது என அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் திட்டவட்டமாகக் கோரிக்கை விடுத்துள்ளார்.
புத்தகக் கொள்முதலில் ஊழல்:
மதுரை தமுக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் புத்தகத் திருவிழாவை அமைச்சர் நிர்மல் குமார் இன்று தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறுகையில், “கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் டெலிபோன் டைரக்டரி உள்ளிட்ட புத்தகங்களைக்கூட ஜெராக்ஸ் எடுத்துப் புத்தகங்களாகத் தயாரித்து நூலகங்களுக்கு வழங்கி ஊழல் செய்துள்ளனர். செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திப் போலியான புத்தகங்களைத் தயாரித்து மோசடியில் ஈடுபட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. கலைஞர் நூலகம், பெரியார் நூலகம் எனப் பெயர்களை வைத்துக்கொண்டு ஊழல் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்பட்டுள்ளனர். எங்களது தவெக ஆட்சியில் இதுபோன்ற முறைகேடுகள் நடைபெறாது,” என்று அவர் கடுமையாகச் சாடினார்.
வழக்கறிஞர்கள் நியமனம்:
தொடர்ந்து அவர், “கடந்த காலங்களில் பணம் கொடுத்து அரசு வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட்டதைப் போல இல்லாமல், தகுதியான நபர்கள் மட்டுமே அரசு வழக்கறிஞர்களாக நியமிக்கப்படுவார்கள். இந்த நியமனங்களில் இட ஒதுக்கீடு தொடர்பாக எழுந்துள்ள புகார் குறித்து விசிக தலைவர் திருமாவளவனிடம் நிச்சயமாகப் பேசுவேன். அதன் பின்னர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். பெரியார் நூலக விவகாரத்திலும், தீபாவளிச் சம்பவங்கள் தொடர்பாகவும் திமுகவினர் திசைதிருப்பும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்,” என்று அவர் விளக்கமளித்தார்.
ஊழலற்ற நல்லாட்சி:
மேலும் அவர் கூறுகையில், “கடந்த காலங்களை ஒப்பிடும்போது தற்போது காவல்துறையில் அரசியல் குறுக்கீடுகள் அறவே இல்லை. கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களை ஒழிக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் லஞ்சம் மற்றும் ஊழல் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுள்ளது. திமுகவினர் பணத்தை வைத்துக்கொண்டு மக்களைச் சந்தித்ததைப் போல நாங்கள் வரவில்லை. முதலமைச்சரின் முகத்தை மட்டுமே முன்னிறுத்தி மக்களைச் சந்தித்து வருவதால், இந்த ஆட்சியைக் கவிழ்க்க முடியாது,” என்று ஆணித்தரமாகத் தெரிவித்தார்.
மேகதாது அணை:
இறுதியாகக் காவிரி விவகாரம் குறித்துப் பேசிய அவர், “மேகதாது அணை கட்டுவதற்குக் கர்நாடக அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகளை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். கர்நாடக அரசு அடாவடியாகச் செயல்பட்டால் அது இந்தியாவின் ஒருமைப்பாட்டைப் பாதிக்கும். எனவே, மேகதாது அணை கட்டுவதற்கு ஒன்றிய அரசு எந்தவிதத்திலும் அனுமதி அளிக்கக் கூடாது. தமிழகத்தின் நலனையும், காவிரி நீர் உரிமையையும் பாதிக்கும் வகையில் மேற்கொள்ளப்படும் எந்தவொரு முயற்சியையும் எக்காரணம் கொண்டும் அனுமதிக்க முடியாது,” என்று அமைச்சர் நிர்மல் குமார் மிகக் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார்.