டொராண்டோவில் திங்கட்கிழமை அன்று வாகனத்தின் பின் இருக்கையில் மயங்கிய நிலையில் மீட்கப்பட்ட குழந்தை மருத்துவமனையில் உயிரிழந்துள்ளதாக டொராண்டோ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
டொராண்டோவின் குயின் ஸ்ட்ரீட் ஈஸ்ட் (Queen Street East) மற்றும் பேப் அவென்யூ (Pape Avenue) பகுதியில் உள்ள வாகனமொன்றின் பின் இருக்கையில் குழந்தை ஒன்று அசைவற்றுக் கிடப்பதாகக் கிடைத்த தகவலையடுத்து, தீயணைப்புப் படை, ஆம்புலன்ஸ் மற்றும் பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
குறித்த குழந்தை ஆம்புலன்ஸ் மூலம் அவசரமாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு, அங்கு மருத்துவர்களால் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டதாக இன்ஸ்பெக்டர் ஸ்காட் பிராட்பரி (Scott Bradbury) செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
“துரதிர்ஷ்டவசமாக அந்தக் குழந்தை உயிரிழந்துவிட்ட செய்தியை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். இது குறித்த விசாரணையின் ஆரம்பக் கட்டத்தில் நாங்கள் இருக்கிறோம்,” என்று அவர் கூறினார்.
உயிரிழந்த குழந்தையின் பெற்றோர் மருத்துவமனையில் இருப்பதாகவும், இது தொடர்பான மேலதிக விபரங்களை தற்போது வெளியிட முடியாது எனவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்