தனிநபர் ஒருவரால் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் கமநலசேவைநிலையத்தின்கீழான பெரியஇத்திமடு கமக்கார அமைப்பு பிரிவிலுள்ள வரவுபிலவு குளத்தினை விடுவிப்பதுடன், குறித்த குளத்தினைச் சீரமைப்புச்செய்து விவசாயிகளின் பயன்பாட்டிற்கு கையளிக்குமாறு முல்லைத்தீவு மாவட்ட செயலாளரிடம் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைரசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார்.
இந்நிலையில் குறித்த விடயப் தொடர்பில் தம்மால் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென முல்லைத்தீவு மாவட்டசெயலாளர் உமாமகேஸ்வரன் பதிலளித்துள்ளார்.
வரவுபிலவு குளத்தின்கீழ் நெற்செய்கை மேற்கொள்ளும் விவசாயிகளின் அழைப்பையேற்று 20.04.2026நேற்று குறித்த பகுதிக்கு நேரடியாகச் சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் தனிநபரால் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டு சீரமைக்கப்படாதுள்ள வரபு பிலவுக்குளத்தினைப் பார்வையிட்டிருந்தார். இதன்போது குறித்த குளத்தினை விடுவிப்புசெய்வதுடன், சீரமைத்துத்தருமாறு விவசாயிகளால் இதன்போது கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்நிலையிலேயே 21.04 2026இன்று நாடாளுமன்ற உறுப்பினரால் குறித்த விடயம் முல்லைத்தீவு மாவட்டசெயலாளரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டிருந்தது.
இதுதொடர்பில் மேலும் தெரியவருகையில்,
குறிப்பாக வரபுபிலவுக் குளத்தின் குளக்கட்டு உடைப்பெடுத்த நிலையில் நீண்டகாலமாக சீரமைக்கப்படாது கைவிடப்பட்டநிலையில் காணப்பட்டது.
இந்நிலையில் குறித்த குளத்தின் கீழுள்ள 78ஏக்கர் வயல் நிலங்களுக்குமுரிய 16பயனாளிகள் பெரும்போக மானாவாரி நெற்செய்கையினையே தற்போது மேற்கொண்டுவருகின்றனர்.
இவ்வாறான சூழலில் குறித்த குளத்தை சீரமைப்புச் செய்து தமது பயன்பாட்டிற்கு கையளிக்குமாறு தொடர்ச்சியாக உரியதரப்பினரிடம் தாம் கோரிக்கை விடுத்துவந்தபோதும், அக்குளத்தினைச் சீரமைப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லையென அப்பகுதி விவசாயிகள் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனிடம் முறையிட்டிருந்தனர்.
இத்தகையசூழலில் தனிநபர் ஒருவர் குறித்த வரபுபிலவுக் குளத்தின் 20ஏக்கர்வரையிலான நீரேந்துபகுதியைச் சட்டவிரோதமாக ஆக்கிரமிப்புச்செய்து கடந்த மூன்று வருடங்களாக நெற்செய்கையில் ஈடுபட்டுவருவதாகவும் விவசாயிகளால் நாடாளுமன்ற உறுப்பினரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.
எனவே தனிநபரால் ஆக்கிரமிக்கப்பட்டுள் வரபுபிலவுக் குளத்தினை விடுவிப்புச் செய்வதுடன், சிறுபோக நெற்செய்கையினையும் மேற்கொள்வதற்கு ஏற்றவாறு குறித்த குளத்தை சீரமைப்புச் செய்வதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் அப்பகுதி விவசாயிகள் நாடாளுமன்ற உறுப்பினரிடம் கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில் விவசாயிகளின் கோரிக்கையைக் கேட்டறிந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர், குறித்த பிரச்சினைதொடர்பில் தம்மிடம் எழுத்துமூலமாக கோரிக்கை கைடிதமொன்றினைக் கையளிக்குமாறு கேட்டுக்கொண்டார். அத்தோடு விவசாயிகளால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் தொடர்பில் தம்மால் கவனம் செலுத்தப்படுமெனத் தெரிவித்திருந்தார்.
அந்தவகையில் 21.04.2026இன்று முல்லைத்தீவு மாவட்ட செயலாளரை நேரில் சந்தித்த நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன், தனிநபர் ஆக்கிரமித்துள்ள குறித்த வரபுபிலவு குளத்தினை விடுவிப்புச் செய்வதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தியதுடன், குறித்த குளத்தினைச் சீரமைப்புச் செய்து விவசாயிகளிடம் ஒப்படைப்பதற்குரிய நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வேண்டுமெனவும் வலியுறுத்தினார்.
இந்நிலையில் குறித்து விடயங்கள் தொடர்பில் தம்மால் கவனஞ்செலுத்தப்படுமென முல்லைத்தீவு மாவட்ட செயலாளரால் இதன்போது நாடாளுமன்ற உறுப்பினரிடம் தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.