வவுனியாவைச் சேர்ந்த ஆசிரியையும், சமூக, கலாசார மற்றும் அரசியல் செயல்பாட்டாளருமான வனிதா சேனாதிராஜாவின் மரணம் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் பலத்த சந்தேகங்களை எழுப்பியுள்ளதுடன், இது குறித்து முறையான சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வவுனியா கோவில் குளம் இந்துக்கல்லூரியின் ஆங்கில ஆசிரியையாகப் பணியாற்றியவரும், வவுனியா விசேட காணி மத்தியஸ்த சபையுடன் இணைந்து செயல்பட்டவருமான வனிதா, பொலன்னறுவை மாவட்டத்தின் மின்னேரியா பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் செப்டம்பர் 23 அன்று சடலமாக மீட்கப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆரம்பக்கட்ட அறிக்கைகளின்படி, மின்னேரியா பொலிஸார் இது தற்கொலையாக இருக்கலாம் என சந்தேகித்தபோதிலும், அதிகாரப்பூர்வ முடிவுகள் எதுவும் இதுவரை அறிவிக்கப்படவில்லை. உடற்கூறாய்வுப் பரிசோதனைக்காக உடற்கூறுகள் அனுப்பப்பட்டுள்ளதுடன், மருத்துவ மற்றும் தடயவியல் சான்றுகளின் அடிப்படையில் அடுத்தகட்ட விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆசிரியையாக மட்டுமன்றி, தமிழ் அரசியல், சமூகம், கலை மற்றும் இலக்கிய நிகழ்வுகளிலும் வனிதா தீவிரமாக ஈடுபட்டு வந்துள்ளார். திருகோணமலை பிரகடனம் மற்றும் ஈழத்தமிழ் உரிமைகள் மையம் சார்ந்த கலந்துரையாடல்களிலும் இவர் பங்காற்றியதாகக் கூறப்படுகிறது.
நூவரெலியா பகுதியில் நடைபெறும் பயிற்சிப் பட்டறை ஒன்றில் கலந்துகொள்ளப் போவதாகக் குடும்பத்தினரிடம் கூறிச் சென்றவர், எவ்வாறு மின்னேரியாவில் உள்ள விடுதிக்குச் சென்றார் என்ற கேள்வி உறவினர்களாலும் சக ஆர்வலர்களாலும் எழுப்பப்பட்டுள்ளது.
மேலும், பொலிஸாரால் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படும் 3 பக்கங்கள் கொண்ட தட்டச்சு செய்யப்பட்ட (Typed) கடிதம் குறித்தும் கேள்விகள் எழுந்துள்ளன. அதில் அவரது இறுதிச்சடங்கு ஏற்பாடுகள், அவர் நடத்தி வந்த ஆடை வியாபாரத்தின் எதிர்காலம் மற்றும் கடந்த 15 நாட்களாக அவர் மன உளைச்சலில் இருந்தமை போன்ற தகவல்கள் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், செப்டம்பர் 19 வரை எதிர்காலக் கலை நிகழ்வுகளை உற்சாகமாகத் திட்டமிட்டு வந்தவருக்கு, செப்டம்பர் 22-க்குள் என்ன நேர்ந்தது என்பதை ஆராய வேண்டும் என அவருக்கு நெருக்கமானவர்கள் வலியுறுத்துகின்றனர்.
எனவே, ஆரம்பக்கட்ட சந்தேகங்களை மட்டும் அடிப்படையாகக் கொள்ளாமல், அனைத்து சாத்தியக்கூறுகளையும் பொலிஸார் தீவிரமாக ஆராய வேண்டும் என கோரப்பட்டுள்ளது.
அவர் பயணித்த வழித்தடங்கள், விடுதி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளின் சிசிடிவி (CCTV) காணொளிகள், அறையிலிருந்து பெறப்பட்ட கைரேகைகள், மொபைல் போன் மற்றும் மடிக்கணினி தரவுகள், உடற்கூறாய்வு அறிக்கைகள் மற்றும் கடைசியாக அவருடன் தொடர்பில் இருந்தவர்களின் வாக்குமூலங்கள் ஆகியவை முழுமையாகப் பரிசீலிக்கப்பட வேண்டும் என உறவினர்களும் சமூக ஆர்வலர்களும் கேட்டுக்கொண்டுள்ளனர்.