வட பகுதி மக்கள் அரசாங்கத்தின் மீது வைத்த நம்பிக்கையை முழுமையாக பாதுகாப்போம்.மீண்டும் ஒருபோதும் இனவாத அல்லது மதவாத மோதல்கள் ஏற்பட இடமளிக்கப் போவதில்லை . சிங்கள, தமிழ், முஸ்லிம் ஆகிய அனைத்து மக்களும் சகோதரத்துவத்துடன் வாழக்கூடிய ஒரு இலங்கைத் தேசியத்தைக் கட்டியழுப்புவோம் என பொது நிர்வாகம், மாகாணசபைகள் மற்றும் உள்ளுராட்சிமன்றங்கள் அமைச்சர் சந்தன அபேரத்ன தெரிவித்தார்.
பதிவாளர் நாயகம் திணைக்களத்தின் வடக்கு பிராந்திய ஆவணக் காப்பகத்தைத் திறந்து வைக்கும் நிகழ்வு நேற்று கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
வட மாகாண மக்கள் இதுவரை காலமும் பிறப்பு,திருமணம்,இறப்புச் சான்றிதழ்கள் உள்ளிட்ட அடிப்படை ஆவணங்களைப் பெற்றுக்கொள்வதற்காகக் கொழும்பில் உள்ள பிரதான ஆவணக் காப்பகத்திற்குச் செல்ல வேண்டியிருந்த அசௌகரியத்திற்கு தீர்வு காணும் வகையில், பதிவாளர் நாயகம் திணைக்களத்திற்குச் சொந்தமான வடக்கு பிராந்திய ஆவணக் காப்பகம் நேற்று வியாழக்கிழமை (30) முற்பகல் திறந்து வைக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் வடக்கு மக்கள் எதிர்கொள்ளும் பிரதான நிர்வாக மற்றும் அன்றாடப் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வுகளை வழங்குவதற்குத் தேவையான நடவடிக்கைகளை முறைப்படுத்துவது தொடர்பான முதன்மை விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டன.
இந்த நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் சந்தன அபேரத்ன, இதுவரை காலமும் சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்வதற்காகக் கொழும்பு மாளிகாவத்தை ஆவணக் காப்பகத்திற்குச் செல்ல வேண்டியிருந்ததால், மக்களுக்குப் பல நாட்கள் விரயமானதுடன், போக்குவரத்து மற்றும் தங்குமிடத்திற்காகப் பெருமளவு பணத்தை செலவிட வேண்டியிருந்தது.
30 ஆண்டுகளுக்கும் மேலாக நிலவிய யுத்தத்திற்கு நிர்வாக அதிகாரங்களும் சேவைகளும் பரவலாக்கப்படாமையும் ஒரு காரணியாக அமைந்தது.இத்தகைய நடவடிக்கைகளை பல ஆண்டுகளுக்கு முன்பே மேற்கொண்டிருந்தால் மக்கள் எதிர்கொண்ட இன்னல்களைக் குறைத்திருக்க முடியும்.
ஜனாதிபதியின் அறிவுறுத்தலின் பேரில் வடக்கில் நிலவும் கடுமையான குடிநீர் பிரச்சினைக்குத் தீர்வுகாண்பதற்கான முதற்கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதுடன்,யுத்தத்தினால் இழக்கப்பட்ட காணி உரிமைகளை மீள வழங்கி தீர்த்து வைக்கும் விசேட திட்டமும், சேதமடைந்த வீடுகளுக்காகப் புதிதாக 13,000 வீடுகளைக் கட்டுவதற்கான திட்டமும் கலந்துரையாடல் மட்டத்தில் உள்ளன.
மேலும், இந்த ஆவணக் காப்பகத்தின் எதிர்கால வளர்ச்சிப் பணிகளுக்காக அரசாங்க நிதியுதவி மற்றும் கணினிகள் உள்ளிட்ட பௌதிக வளங்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் அதேவேளையில், ஒட்டுமொத்த அரச சேவையிலும் நிலவும் வெற்றிடங்களை நிரப்புவதற்காக இந்த ஆண்டில் நிர்வாக சேவைக்கு 2000 க்கும் மேற்பட்டோரையும் 30,000 ஆசிரியர்களையும் ஆட்சேர்ப்பு செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்றார்.
இந்நிகழ்வில் வவுனியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம். ஜெகதீஸ்வரன் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள், பதிவாளர் நாயகம் எஸ். ஜனதீபன் உள்ளிட்ட திணைக்கள அதிகாரிகள், வவுனியா மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட அரச அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துக் கொண்டனர்.