மாகாண சபை தேர்தல் குறித்து டில்வின் சில்வா வெளியிட்டுள்ள கருத்து, வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தமிழ் மக்களை அவர் தரக்குறைவாக மதிப்பிடுவதையே பிரதிபலிக்கின்றது என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் விமர்சித்துள்ளார்.
மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் தனியார் ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிடுகையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,
மாகாண சபை தேர்தல் குறித்து ஜே.வி.பி. பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ள கருத்து,
தமிழ் அரசியல் கட்சிகளை அன்றி வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தமிழ் மக்களையே அவர் தரக்குறைவாக மதிப்பிடுவதை பிரதிபலிக்கின்றது ‘நாடு முழுவதும் இல்லாவிட்டாலும் வடக்கு கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களுக்காவது மாகாண சபை தேர்தலை நடத்துமாறு’ நான் கோரிய போது, அரசாங்கத்தின் பதில் வெறும் ‘சிரிப்பாகவே’ அமைந்தது.
முன்னாள் ஜனாதிபதிகளான ராஜபக்சக்கள் மற்றும் மைத்திரிபால சிறிசேன ஆகியோர் செய்த தவறுகளைத் திருத்துவோம் எனக் கூறி ஆட்சிக்கு வந்தவர்கள், இன்று அதே பிழைகளையே தொடர்ச்சியாக முன்னெடுத்துள்ளனர்.
அதே போன்று தற்போதைய அரசாங்கம் மக்களைச் சந்திக்க அஞ்சுகின்றது , அதன் காரணமாகவே மாகாண சபைத் தேர்தல்களை ஒத்தி வைத்துள்ளனர்.
அதேநேரம், ‘அரகலய’ எனப்படும் காலிமுகத்திடல் போராட்டம் ஊடாக வீதிக்கு வந்தது சிங்கள மக்களே தவிர, தேசிய மக்கள் சக்தி (NPP) அல்ல. ஆனால்’காலிமுகத்திடல் போராட்டத்தின் உழைப்பை மக்கள் விடுதலை முன்னணி இன்று அப்படியே கைப்பற்றிச் சென்றுள்ளது.
அதன் அரசியல் பலனை இன்று மக்கள் விடுதலை முன்னணி அறுவடை செய்துள்ளது’. ‘அரகலய’ போராட்டமே இலங்கையில் இனவாத அரசியலை இல்லாமலாக்கியது சிங்கள இனவாதத்தைத் தோற்கடிக்க சிங்கள மக்களே முன்னின்றனர், அவர்கள் மாத்திரமல்ல, நாமும் காலம் காலமாக இனவாதத்திற்கு எதிராகவே செயல்பட்டோம்.
நாட்டில் இனி இனவாதம் மீண்டும் தலைதூக்க முடியாது. ‘அத்துடன் இனவாதத்திற்கு எதிரான சக்திகளை ஒழிக்க அரசாங்கம் முற்பட்டால், நாம் அதற்கு எதிராக முன்நிற்போம்’ என்றும் அவர் தெரிவித்துள்ளார்.