நன்றி: வீரகேசரி நாளிதழ் .
இலங்கையில் கடந்த காலங்களில் இடம்பெற்ற மிக மோசமான இன வன்முறைச் செயல்களில் ஒன்றான யாழ்ப்பாண பொது நூலகம் எரிக்கப்பட்ட வரலாற்றுச் சம்பவம் 1981ஆம் ஆண்டு இதே திகதி (31) இதே கிழமை (ஞாயிற்றுக்கிழமை), நள்ளிரவில் நடந்தது. இது, காலத்தால் மறையாதது, மறக்கமுடியாதது!
யாழ். பொது நூலகம் 1981ஆம் ஆண்டு மே 31ஆம் திகதி நள்ளிரவு வன்முறைக் கும்பலால் தீ வைத்து எரிக்கப்பட்டது. நூலகத்தில் மட்டுமன்றி, இரவோடு இரவாக பல இடங்களில் தீ வைக்கப்பட்டு, யாழ். நகர் பாரிய சேதங்களை சந்தித்தது. அன்றைய பதற்றமான சூழ்நிலையை, அந்நாட்களில் வெளியான வீரகேசரி பத்திரிகைகள் செய்திகளாக வெளியிட்டிருந்தன.
1981ஆம் ஆண்டு ஜூன் மாதம் 2ஆம் திகதி வெளியான வீரகேசரி நாளிதழ், “யாழ் நகரில் இராணுவம் காவல், பல இடங்களில் தீவைப்பு, பாரிய சேதங்கள், இரவோடிரவாக நிகழ்ந்த அனர்த்தம்” என்ற தலைப்பில் பிரசுரமான விரிவான செய்திகளை இங்கு காணலாம்.
ஞாயிறன்று இரவு யாழ் நகரிலும் சுற்றுப்புறங்களிலும் பரவலாக நடந்த கொள்ளை, கார் எரிப்பு, கடையுடைப்பு, தீ வைப்புச் சம்பவங்களையடுத்து, நகரில் மரண அமைதி நிலவியதாகவும் மக்களின் நடமாட்டமின்றி நகர் வெறிச்சோடிக் கிடந்ததாகவும் அன்றைய வீரகேசரி பத்திரிகை பதிவு குறிப்பிட்டிருந்தது. அத்துடன், வாகனங்கள் தீக்கிரை, வீடுகள் மீது பெற்றோல் குண்டுவீச்சு, அன்றைய எம்.பி. யோகேஸ்வரனின் வீடு தரைமட்டம், அவரது ஜீப் தீக்கிரை, எம்.பி. தனது மனைவியுடன் சுவர் ஏறிக்குதித்துத் தப்பிய சம்பவம், கோவில் தேருக்கு தீ வைப்பு, கட்டடங்கள், கடைகளுக்கு தீவைப்பு என பலப் பல அசம்பாவிதங்கள் நடந்ததை அன்றைய வீரகேசரி தெளிவுபட குறிப்பிட்டிருந்தது.

