கொழும்பு – நீர்கொழும்பு பிரதான வீதியில், கதான மற்றும் வெலிகம்பிட்டிய இடைப்பட்ட பகுதியில், மோட்டார் சைக்கிள்களின் முன் சக்கரத்தை மேலே தூக்கியவாறு (Wheelie) அச்சுறுத்தும் வகையில் வாகனங்களைச் செலுத்திய 6 இளைஞர்கள் அதிகாலை கதான பொலிஸாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
பெருமளவிலான சத்தத்தை எழுப்பி, வீதியில் சென்ற ஏனைய வாகனங்களுக்குப் இடையூறு விளைவித்தும், சக ஓட்டுநர்களைப் பீதியடையச் செய்தும், ஆபத்தான முறையில் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் த்ரீவீலரை (Three-Wheeler) செலுத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் கதான, படகம பகுதியைச் சேர்ந்த 20 முதல் 22 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் ஆவர். ஆபத்தான முறையில் வாகனங்களைச் செலுத்திய இந்த 6 பேரில் 4 பேரிடம் ஓட்டுநர் உரிமம் (Driving License) இல்லை என்பதும், இவர்கள் பயன்படுத்திய எந்தவொரு வாகனத்திலும் பதிவு எண்கள் அடங்கிய ‘நம்பர் பிளேட்டுகள்’ பொருத்தப்பட்டிருக்கவில்லை என்பதும் பொலிஸ் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
கைது செய்யப்பட்ட 6 இளைஞர்களும் ராகம சட்ட வைத்திய அதிகாரியிடம் (JMO) மருத்துவப் பரிசோதனைக்காக ஆஜர்படுத்தப்பட்டனர். அந்தப் பரிசோதனையில், அவர்கள் அனைவரும் அபாயகரமான போதைப்பொருட்களைப் (Drugs) பயன்படுத்தியிருந்தமை மருத்துவ ரீதியாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
சந்தேக நபர்கள் வெலிசர நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.