சென்னை:
மேகதாது அணை மற்றும் காவிரி நதிநீர் விவகாரம் குறித்து முதலமைச்சர் விஜய் விவசாயிகளுக்குத் தெளிவுபடுத்த வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். செய்தியாளர் சந்திப்பு மற்றும் எக்ஸ் தளப் பதிவின் வாயிலாகத் தமிழக அரசின் நிலைப்பாடு குறித்து அவர் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார்.
வாய் திறக்கவே மறுக்கிறார்:
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, “நமக்குக் கிடைக்க வேண்டிய காவிரி நீர் மாதாந்திர வாரியாக வழங்கப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பைப் பெற்றுத் தந்திருக்கிறோம். அந்தத் தீர்ப்பைக் கூட அமல்படுத்த முடியாத கையாலாகாத அரசாக இந்த அரசு இருக்கிறது. டெல்டா விவசாயிகள் அதிர்ச்சியில் உறைந்துபோய் இருக்கிறார்கள். கர்நாடக முதலமைச்சர் சிவக்குமார் ஒவ்வொரு நாளும் மேகதாது, காவிரி குறித்துத் தொடர்ந்து பேசி வருகிறார். ஆனால், தமிழக முதலமைச்சர் விஜய் இது குறித்து இப்போதுவரை வாய் திறக்கவே மறுக்கிறார். இனியாவது மேகதாது அணை குறித்து முதலமைச்சர் விஜய் விவசாயிகளுக்குத் தெளிவுபடுத்த வேண்டும்,” என்று கூறினார்.
வெற்றி மாடல் புத்தகம்:
முன்னதாகத் தனது எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டிருந்த எடப்பாடி பழனிசாமி, “காவிரி விவகாரம் தொடர்பாகத் தமிழக அரசின் 2 இடையீட்டு மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இந்த அவமானம் வெற்றி மாடல் புத்தகத்தின் எந்தப் பக்கத்தில் வரப் போகிறது? காவிரி விவகாரம் தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்ட மாட்டீர்கள்; காங்கிரஸ் கட்சியோடு காவிரி குறித்துப் பேச மாட்டீர்கள்; சட்டப் போராட்டத்தையும் ஒழுங்காக நடத்த மாட்டீர்கள். தமிழ்நாட்டுக்கு நேரெதிராகப் பேசிவரும் கர்நாடக முதலமைச்சரை ஒரு வார்த்தைகூடக் கண்டிக்காமல், டெல்லியில் அவரோடு புகைப்படத்திற்கு போஸ் கொடுக்கிறீர்கள். ஜூன் 12-இல் மேட்டூர் அணையைத் திறக்க முடியாமல் ஏற்கனவே குறுவை சாகுபடி வீணாகிப் போனது. தற்போதும் கர்நாடக அரசு தண்ணீரை முழுமையாக வழங்காததால், இந்த அரசால் சம்பா சாகுபடியும் பாதிக்கப்பட உள்ளது,” என்று குறிப்பிட்டுள்ளார்.
குடி இல்லையேல் கோன் எதற்கு?:
தொடர்ந்து அந்தப் பதிவில் அவர், “டெல்லிக்குப் போய் சோனியா காந்தியின் குடும்பக் கதையைக் கேட்டுச் சிரிக்க இருந்த நேரம், தமிழக விவசாயிகளைப் பற்றிப் பேசக் கொஞ்சம் கூட இல்லையா? தமிழகத்தின் ஜீவாதார உரிமையோடு, விவசாய மக்களின் வாழ்க்கையோடு விளையாடிக் கொண்டிருக்கிறீர்கள். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, நான் எனத் தொடர்ந்து அதிமுக கடுமையான போராட்டங்களுக்குப் பிறகு பெற்ற உரிமை இது. காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்க 22 நாட்கள் நாடாளுமன்றத்தையே முடக்கி நமது உரிமையை நிலைநாட்டினோம். நீர் இன்றி நெல் இல்லை; நெல் இன்றி குடி இல்லை; குடி இல்லையேல் கோன் எதற்கு என்று கேட்கும் நிலைக்குத் தள்ளிவிடாதீர்கள்,” என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
#EdappadiPalaniswami #AIADMK #MekedatuDam #CauveryIssue #CMVijay #BmNews #TamilNews #BreakingNews #LatestNews #TamilNewsLive