கோவை:
மன்னிக்கும் தன்மை மற்றும் பெருந்தன்மை இல்லாத தலைமை நீடித்த வரலாறு இல்லை என்றும், அது எடப்பாடி பழனிசாமிக்கும் ஏற்படும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் விமர்சித்துள்ளார். கோவையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தபோது அதிமுக தலைமை மற்றும் எஸ்.பி.வேலுமணி சந்திப்பு குறித்து அவர் விரிவாகப் பேசினார்.
காலத்தை எதிர்த்துப் போரிட முடியாது:
செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், “ஞானத்தை எதிர்த்துப் போரிட முடியும். ஆனால், காலத்தை எதிர்த்துப் போரிட முடியாது. காலம் வைக்கின்ற புள்ளியை உங்களால் அழிக்க இயலாது. இதுதான் எடப்பாடிக்கு நடைபெறுகின்ற நிகழ்வு. தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி ஒவ்வொருவராக வெளியேற்றுகின்றார்,” என்று கூறினார்.
பழனிசாமியின் தலைமை நீடிக்காது:
2 கோடி தொண்டர்களில் எஸ்.பி.வேலுமணியும் ஒருவர்தான் என்று எடப்பாடி பழனிசாமி பேசியது குறித்துச் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த செங்கோட்டையன், “2 கோடி தொண்டர்கள் இல்லை என்று கூறவில்லை. எஸ்.பி.வேலுமணி முக்கியப் பொறுப்பாளராக இருந்து, ஒருவர் முதலமைச்சராகவும் பொதுச்செயலாளராகவும் வருவதற்கு உறுதுணையாக இருந்தவர். இதனை மறந்து தற்போது பேசிக்கொண்டிருக்கிறார்கள். காலம் அவருக்குப் பதில் சொல்லும். மன்னிக்கும் தன்மை, பெருந்தன்மை இல்லாத தலைமை நீடித்த வரலாறு இல்லை. அது பழனிசாமிக்கும் ஏற்படும்,” என்று தெரிவித்தார்.
எஸ்.பி.வேலுமணியுடன் பேசியது என்ன?:
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியுடன் பேசியது குறித்த கேள்விக்கு விளக்கமளித்த அவர், “பொள்ளாச்சியில் நடைபெற்ற திருமணம், உறவு முறையில் இருவருக்கும் வேண்டிய திருமணம். நானும் சென்றிருந்தேன், எஸ்.பி.வேலுமணியும் வந்திருந்தார். எங்களது கழக நிர்வாகிகளும் வந்திருந்தார்கள். எல்லோருமே அங்கு அருகாமையில் இருந்தோம். இருவரும் சும்மா அமர்ந்து கருத்துக்கள் பேசிக்கொண்டிருந்தோம். அரசியல் பேசவில்லை,” என்று கூறினார்.
புரட்சித்தலைவர் வேறு, எடப்பாடி வேறு:
தொடர்ந்து பேசிய அமைச்சர் செங்கோட்டையன், “ஜாக்பாட் ஆட்சியில் வந்திருக்கிறது என ஜாக்பாட் அடித்தவர் யார், அதில் பெயிலியர் ஆனவர் யார் என்பது நாடு அறியும். திமுகவுடன் சேர்ந்து ஜாக்பாட் அடிக்கப் பார்த்தார். ஆனால் முகம் கிழிக்கப்பட்டிருக்கிறது. எடப்பாடி பழனிசாமியைப் பொறுத்தவரை பல்வேறு நிலைகளில் ஆட்சிக்கு வர வேண்டும் எனத் துடிக்கிறார். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வழியில் வந்த இயக்கம் எங்கே சென்று கொண்டிருக்கிறது என்பதுதான் மக்கள் கேட்பது. பொதுவாகப் புரட்சித்தலைவர் என்பது வேறு, புரட்சித்தலைவி என்பது வேறு, எடப்பாடி என்பது வேறு; அவர் புரிந்து கொண்டால் சரி,” என்று விமர்சித்தார். கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் முன்வைத்துள்ள இந்தக் கருத்துகள் மற்றும் அதிமுக தலைமை குறித்த விமர்சனங்கள் தமிழ்நாடு அரசியல் வட்டாரத்தில் கவனத்தைப் பெற்றுள்ளன.
#Sengottaiyan #EdappadiPalaniswami #AIADMK #SPVelumani #Coimbatore #BmNews #TamilNews #BreakingNews #LatestNews #TamilNewsLive