2027 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் ஊடாக, மாதாந்த தனிநபர் வருமான வரி விலக்கு எல்லையை 150,000 ரூபாயிலிருந்து 162,500 ரூபாயாக உயர்த்த அரசாங்கம் முன்மொழிந்துள்ளது. இதன் மூலம், மாதாந்த சம்பளம் பெறுவோருக்கு மேலதிக வரி நிவாரணம் வழங்கப்படவுள்ளது.
பாராளுமன்றத்தினால் வெளியிடப்பட்டுள்ள உத்தியோகபூர்வ வரவு – செலவுத் திட்ட உரையின் பிரகாரம், வருடாந்த தனிநபர் வருமான வரி விலக்குப் படியை 1.8 மில்லியன் ரூபாயிலிருந்து 1.95 மில்லியன் ரூபாயாக உயர்த்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முன்மொழிந்துள்ளார்.
முன்மொழியப்பட்டுள்ள திருத்தங்களுக்கு அமைய, 162,500 ரூபாய் வரை மாதாந்த சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளைப் பெறுபவர்கள் தமது சம்பளத்திற்கு வருமான வரி செலுத்த வேண்டியதில்லை.
மேலும், படிப்படியாக அதிகரிக்கும் தனிநபர் வருமான வரி கட்டமைப்பை மாற்றியமைப்பதற்கும் வரவு – செலவுத் திட்ட உரையில் முன்மொழியப்பட்டுள்ளது. அதற்கமைய, வரி வரம்புகளை விரிவுபடுத்துவதுடன், ஆரம்ப 6% வரி வரம்பிற்குப் பின்னர் தற்போதுள்ள 18% வரி வீதத்திற்குப் பதிலாக 12% எனும் புதிய வரி வீதத்தை அறிமுகப்படுத்தவும் முன்மொழியப்பட்டுள்ளது. இதன்படி, முன்மொழியப்பட்டுள்ள புதிய வரி வீதங்கள் முறையே 6%, 12%, 18%, 24%, 30% மற்றும் 36% ஆக அமையும்.
இந்தத் திருத்தங்களின் ஊடாக, அதிஉயர் தனிநபர் வருமான வரி வீதம் அறவிடப்படும் மாதாந்த வருமான எல்லையும் 358,000 ரூபாயிலிருந்து 433,000 ரூபாயாக அதிகரிக்கப்படவுள்ளது.
வரவு – செலவுத் திட்ட உரைக்கு அமைய, முன்மொழியப்பட்டுள்ள இம்மாற்றங்கள் மூலம் தனிநபர் வரி செலுத்துவோருக்கு அவர்களின் வரிக்குட்பட்ட வருமானத்திற்கு ஏற்ப, மாதாந்தம் 750 ரூபாய் முதல் 15,750 ரூபாய் வரை மேலதிக வரி நிவாரணம் கிடைக்கப்பெறும். 2025 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட வரிச் சீர்திருத்தங்களுடன் ஒன்றிணைத்துப் பார்க்கும்போது, தனிநபர் வரி செலுத்துவோருக்கு வழங்கப்படும் மொத்த மாதாந்த வரி நிவாரணம் 4,250 ரூபாய் முதல் 36,250 ரூபாய் வரை இருக்கும் என அந்த ஆவணத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலதிக வருமான வரி நிவாரணங்களை வழங்கும் நோக்கில், உள்நாட்டு இறைவரிச் சட்டத்தில் அரசாங்கம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ள திருத்தங்களின் ஒரு பகுதியாகவே இந்த முன்மொழிவுகள் அமைந்துள்ளன. உத்தியோகபூர்வ வரவு – செலவுத் திட்ட உரையில் உள்ளடக்கப்பட்டுள்ள இம்மாற்றங்கள், தற்போது முன்மொழிவுகளாக மட்டுமே காணப்படுவதுடன், அவை உரிய சட்டவாக்கச் செயன்முறைகளுக்கு உட்பட்டவையாகும்.