மத்திய கிழக்கில் தொடர்ந்து நீடித்து வரும் போர் சூழல் காரணமாக, அங்குள்ள நாடுகளைச் சேர்ந்த சர்வதேச மாணவர்களுக்கு கல்வி மற்றும் நிதி ரீதியிலான விசேட சலுகைகளை வழங்கப்போவதாக கனடாவின் முன்னணி பல்கலைக்கழகங்கள் அறிவித்துள்ளன.
பரீட்சைகளை ஒத்திவைத்தல் (Exam Deferrals), பாடத்திட்ட வேலைகளுக்கான காலக்கெடுவை நீடித்தல் மற்றும் மாணவர் சேர்க்கைக்கான ஆவணங்களை சமர்ப்பிப்பதில் தளர்வு ஆகியவற்றை பல்கலைக்கழகங்கள் வழங்குகின்றன.
விக்டோரியா பல்கலைக்கழகம் (University of Victoria) மற்றும் குயின்ஸ் பல்கலைக்கழகம் (Queen’s University) போன்றவை கல்விக் கட்டணத்தைச் செலுத்துவதற்கான காலக்கெடுவை நீடித்துள்ளன. அத்துடன் தாமதக் கட்டணங்கள் (Late penalties) நீக்கப்பட்டுள்ளதோடு, அவசரகால உதவித்தொகைகளும் (Emergency bursaries) வழங்கப்படுகின்றன.
போரினால் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ள மாணவர்களுக்கு விசேட ஆலோசனைகள் மற்றும் மனநலச் சேவைகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளன.
ஈரான், லெபனான், இஸ்ரேல், பஹ்ரைன், ஈராக், ஜோர்டான், குவைத், ஓமான், பாலஸ்தீனம், கத்தார், சவுதி அரேபியா, சிரியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் (UAE) ஆகிய நாடுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு இந்த உதவிகள் வழங்கப்படுவதாக மெக்கில் பல்கலைக்கழகம் (McGill University) தெரிவித்துள்ளது.
பெப்ரவரி 28 அன்று போர் தொடங்கியதில் இருந்து ஈரானில் 1,900 க்கும் அதிகமானோரும், லெபனானில் 1,300 க்கும் அதிகமானோரும் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கனடாவில் தற்போது ஈரானைச் சேர்ந்த 23,000-க்கும் மேற்பட்ட மாணவர்களும், லெபனானைச் சேர்ந்த 1,800-க்கும் மேற்பட்ட மாணவர்களும் கல்வி பயின்று வருகின்றனர்.
தற்போது வழங்கப்பட்டுள்ள சலுகைகள் வரவேற்கத்தக்கவை என்றாலும், இது போன்ற நெருக்கடி காலங்களில் சர்வதேச மாணவர்களுக்கு உதவ ஒரு நிரந்தரக் கொள்கை (Systemic framework) உருவாக்கப்பட வேண்டும் என டொராண்டோ பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவர் அமீர் மொகடம் தெரிவித்துள்ளார். சொந்த நாடுகளுடனான தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ள நிலையில், மாணவர்கள் பெரும் தவிப்புக்குள்ளாகியிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.