முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியொன்றில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி போலியாக உருவாக்கப்பட்ட புகைப்பட மொன்றைக் காட்டி அரசியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளதாகவும், அவர் முற்றிலும் போலிப் புகைப்படத்தைக் கண்டு ஏமாற்றமடைந்துள்ளார் என்றும் கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை பிரதிமைச்சர் சதுரங்க அபேசிங்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் பிரதிமைச்சர் சதுரங்க அபேசிங்க தனது உத்தியோகபூர்வ சமூக வலைத்தளப் பக்கத்தில் புகைப்பட ஆதாரங்களுடன் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், உண்மைப் புகைப்படத்தையும், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் மாற்றியமைக்கப்பட்ட போலிப் புகைப்படத்தையும் ஒப்பீடு செய்து, விமல் வீரவன்சவின் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்துள்ளார்.
தனக்கு எதிராக அரசியல் ரீதியிலான குற்றச்சாட்டுகளைச் சுமத்துவதற்காகவே விமல் வீரவன்ச இந்த மாற்றியமைக்கப்பட்ட புகைப்படத்தைப் பயன்படுத்தியுள்ளார் என்று சுட்டிக்காட்டியுள்ளார். உண்மைப் படம் குறித்து விளக்கமளித்துள்ள அவர், “கடந்த 2022 ஆம் ஆண்டு ‘அரகலய’ போராட்டக் காலத்தில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்கள் போராட்டக்காரர்கள் மீது நடத்திய தாக்குதலின் போது, ஆபத்திலிருந்த மக்களைக் காப்பாற்ற உதவிய ‘அமால்’ என்பவருடன் எடுக்கப்பட்ட படமே அதுவாகும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், ஏனைய அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் போராட்டக் களத்திற்கு வருவதற்கு முன்பாக, வன்முறையாளர்களை தைரியமாக எதிர்கொண்ட ஒரு சிலரில் ‘அமால்’ முக்கிய பங்களித்ததாகவும், போராட்டக் களத்தில் அவர் செய்த தியாகத்தைப் பாராட்டும் வகையிலேயே அந்தப் புகைப்படம் எடுக்கப்பட்டதாகவும் பிரதிமைச்சர் தெரிவித்துள்ளார்.
எனினும், குறித்த புகைப்படத்தில் உள்ள ‘அமால்’ என்பவரை ஒரு பௌத்த துறவியாக சித்தரிக்கும் வகையில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கடந்த காலத்தில் அது மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இத்தகைய போலிப் புகைப்படத்தைக் காட்டி விமல் வீரவன்ச அரசியல் பிரசாரத்தில் ஈடுபட்டது, அவரது அரசியல் அறியாமையையும் செயற்கை நுண்ணறிவு போலிப் பிரசாரங்களுக்கு அவர் எளிதில் பலியாகிவிடுவதையுமே வெளிகாட்டுவதாக தனது சமூக வலைத்தளப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.