தெற்காசிய நாடுகளின் பிராந்திய ஒத்துழைப்பு சங்கத்தின் பொதுச்செயலாளர் எம்.டி. கொலாம் சர்வார் திங்கட்கிழமை (22) அலரி மாளிகையில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவைச் சந்தித்து விடைபெறும் வகையிலான மரியாதை நிமித்தமான கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
சார்க் அமைப்பின் பொதுச்செயலாளர் எம்.டி. கொலாம் சர்வாரை வரவேற்ற பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய,பிராந்திய ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கும் சார்க் அமைப்பின் நோக்கங்களை முன்னோக்கி கொண்டு செல்வதற்கும் பொதுச்செயலாளர் மேற்கொண்ட முயற்சிகளைப் பாராட்டினார்.
கொழும்பில் செவ்வாய்க்கிமை (23) நடைபெறவிருக்கும் ‘சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்பதற்கான அமைச்சர்கள் மட்டத்திலான மாநாடு’ குறித்து இக்கலந்துரையாடலில் முக்கிய கவனம் செலுத்தப்பட்டது. தெற்காசியா முழுவதும் உள்ள சிறுவர்களின் உரிமைகள்,பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை உறுதிப்படுத்துவதற்கு ஒன்றிணைந்த பிராந்திய நடவடிக்கை மிகவும் முக்கியமானது என்பதை பிரதமர் இங்கு வலியுறுத்தினார்.
இச்சந்திப்பின் போது,சார்க் செயலகத்தின் தற்போதைய பணிகள் மற்றும் சார்க் கட்டமைப்பின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் முக்கிய பிராந்திய திட்டங்கள் குறித்து பொதுச்செயலாளர் பிரதமருக்கு விளக்கமளித்தார். உறுப்பு நாடுகளுக்கு இடையே மேம்பட்ட ஒத்துழைப்பின் மூலம் உணவுப் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கும் சிறுவர்களின் ஊட்டச்சத்தை மேம்படுத்துவதற்கும் சார்க் அமைப்பு மேற்கொண்டு வரும் முயற்சிகள் குறித்து இங்கு சிறப்புக் கவனம் செலுத்தப்பட்டது.
சிறந்த நடைமுறைகளைப் பரிமாறிக்கொள்வதற்கும், பிராந்திய இணைப்பு மற்றும் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கும் சார்க் அமைப்பிற்கும் ஏனைய பிராந்திய அமைப்புகளுக்கும் இடையே நெருக்கமான ஈடுபாட்டை வளர்ப்பதன் அவசியத்தையும் பிரதமர் வலியுறுத்தினார்.
சார்க் அமைப்பிற்கான இலங்கையின் நீண்டகால அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்திய பிரதமர்இ பிராந்திய அமைதிஇ செழிப்பு மற்றும் மக்களை மையமாகக் கொண்ட வளர்ச்சியை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட சார்க் அமைப்பின் முயற்சிகளுக்கும் திட்டங்களுக்கும் இலங்கை தொடர்ந்து தனது ஆதரவை வழங்கும் என உறுதியளித்தார்.
இச்சந்திப்பில் காத்மாண்டுவிலுள்ள சார்க் செயலகத்தின் பணிப்பாளர் வருண வில்பத, பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி, பிரதமரின் மேலதிக செயலாளர் சாகரிகா போகஹவத்த மற்றும் வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சின் அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.