பாகிஸ்தானின் தென்மேற்குப் பகுதியான பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள நிலக்கரிச் சுரங்கம் ஒன்றில் வியாழக்கிழமை ஏற்பட்ட பயங்கர வாயு வெடிப்பில் குறைந்தது 32 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் 10 பேர் சுரங்கத்திற்குள் சிக்கியுள்ள நிலையில், அவர்களை மீட்பதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
பலுசிஸ்தான் மாகாணத் தலைநகரான குவெட்டாவின் புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள நிலக்கரிச் சுரங்கத்திலேயே இத்துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சுரங்கத்திற்குள் மீத்தேன் வாயு அளவுக்கு அதிகமாகச் சேர்ந்ததே இவ்வெடிப்புக்குக் காரணம் என அரசுச் சுரங்க ஆய்வாளர் கனி பலோச் தெரிவித்துள்ளார்.
விபத்து நடந்த சில மணி நேரங்களிலேயே 07 உடல்கள் கண்டெடுக்கப்பட்ட நிலையில், பின்னர் மேலும் 25 உடல்கள் மீட்கப்பட்டு, இதுவரை மொத்தம் 32 உடல்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
சுரங்கத்திற்குள் மீத்தேன் வாயு வெடிக்கும் போது ஒட்சிசன் அளவு முற்றிலும் பூஜ்ஜியமாகிவிடும் என்பதால், சிக்கியுள்ள 10 பேரும் உயிருடன் மீட்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் மிகவும் குறைவாகவே உள்ளதாக அதிகாரிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.
உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்குத் தலா 500,000 பாகிஸ்தான் ரூபாயை நிவாரணமாக வழங்வுள்ளதாகப் பலுசிஸ்தான் சுரங்கத் துறை அமைச்சர் சோயிப் அறிவித்துள்ளார்.
விபத்துக்கான காரணம் குறித்து முழுமையான விசாரணை நடத்தப்பட்டு, சுரங்கப் பாதுகாப்பு நடவடிக்கைகள் மீளாய்வு செய்யப்படும் எனவும் அவர் உறுதியளித்துள்ளார்.
பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றாத உரிமையாளர்களின் அலட்சியப் போக்கே இந்த விபத்திற்குக் காரணம் எனப் பாகிஸ்தான் மத்திய சுரங்கத் தொழிலாளர் சம்மேளனம் குற்றம் சாட்டியுள்ளது.
பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள பெரும்பாலான சுரங்கங்களில் காற்றோட்ட வசதி மற்றும் வாயு கண்காணிப்பு கருவிகள் இல்லாததால், இது போன்ற கொடிய விபத்துகள் அங்குத் தொடர்கதையாகி வருவதாக தொழிலாளர் அமைப்புகள் கவலை தெரிவிக்கின்றன.