சென்னை:
வடலூர் பார்வதிபுரத்தில் உள்ள சத்திய ஞானசபை வளாகத்துப் பெருவெளியில் வள்ளலார் பன்னாட்டு மையம் அமைக்கும் திட்டம் கைவிடப்படுவதாகச் சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளதைப் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மனதார வரவேற்றுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பார்வதிபுரம் மக்களின் உணர்வுகளுக்கும், வள்ளலாரின் உயரிய நோக்கங்களுக்கும் எதிராக முந்தைய திமுக அரசால் மேற்கொள்ளப்பட்ட சதித்திட்டம் கைவிடப்பட்டது மிகுந்த வரவேற்புக்குரியது என்று தெரிவித்துள்ளார். வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய வள்ளலாரின் பெருமை உலகம் முழுவதும் கொண்டு செல்லப்பட வேண்டும் என்பதற்காகப் பன்னாட்டு மையம் அமைக்கப்பட வேண்டும் என்பதில் எவருக்கும் மாற்றுக்கருத்து இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், ஒவ்வொரு ஆண்டும் தைப்பூசத் திருநாளில் ஜோதி தரிசனம் காணப் பல லட்சம் பக்தர்கள் கூடும் பெருவெளியில் இந்தப் பன்னாட்டு மையம் அமைக்கப்படும் என்று முந்தைய திமுக அரசு அறிவித்தபோது, பாட்டாளி மக்கள் கட்சி அதற்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்துப் பல்வேறு தொடர் போராட்டங்களை நடத்தியது. பெருவெளியைக் காக்க வலியுறுத்தி நடத்தப்பட்ட பொதுக்கூட்டத்தில் தாமும் பங்கேற்றதையும், மக்கள் உரிமைப் பயணத்தின் போது அங்குச் சென்று வழிபட்டதையும் அன்புமணி நினைவுகூர்ந்தார். முந்தைய திமுக அரசு சில சுயநல நோக்கங்களுக்காக அங்குதான் மையம் அமைக்கப்படும் என்பதில் பிடிவாதமாக இருந்ததுடன், போராடிய மக்கள் மீது அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விட்டது என்றும் அவர் கடுமையாகச் சாடினார்.
ஆனால், புதிய அரசு பதவியேற்ற பிறகு பாமக மற்றும் பார்வதிபுரம் மக்களின் நீண்டகாலக் கோரிக்கையை ஏற்று, அந்தத் திட்டத்தைக் கைவிடுவதாக அறிவித்திருப்பது மிகச் சிறந்த முடிவு எனப் பாராட்டியுள்ளார். பெருவெளியில் பன்னாட்டு மையத்தை அமைக்கக் கூடாது என்பதுதான் பாமகவின் நிலைப்பாடு என்றும், அதே நேரத்தில் பெருவெளியைப் பாதிக்காத வகையில் மாற்று இடத்தில் மையம் அமைக்கப்படுவதைத் தாங்கள் எதிர்க்கவில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார். எனவே, வள்ளலாருடன் தொடர்புடைய வடலூரில் வேறு இடத்திலோ அல்லது அருகிலுள்ள வள்ளலாருடன் தொடர்புடைய இடங்களிலோ பன்னாட்டு மையத்தை அமைக்கத் தமிழக அரசு உரிய மாற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
#AnbumaniRamadoss #VadalurVallalar #PMK #TamilNaduGovt #VallalarCentre #SathyaGnanaSabai #BmNews #TamilNews #BreakingNewsTN #CuddaloreNews #PoliticalUpdate #TamilNaduPolitics #TamilNewsLive