பயங்கரவாத தடுப்புச் சட்டத்துக்கு மாற்றீடாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலம் தொடர்பில் பாராளுமன்றத்துக்கு வெளியில் ஜனாதிபதி தலைமைத்துவத்தில் பரந்துப்பட்ட கலந்துரையாடல் ஒன்றை நடத்த வேண்டும் என சிவில் தரப்பினர் யோசனை முன்வைத்துள்ளனர்.
ஆளுகை,நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு தொடர்பான துறைசார் மேற்பார்வைக்குழு அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் நஜித் இந்திக தலைமையில் திங்கட்கிழமை (23) பாராளுமன்ற கட்டத் தொகுதியில் கூடியது.
பயங்கரவாத தடுப்புச் சட்டத்துக்கு மாற்றீடாக அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலம் தொடர்பில் அரசியலமைப்பின் 121(1) பிரிவின் பிரகாரம் உயர்நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தொடர்பில் சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன கடந்த வாரம் உயர்நீதிமன்றத்தின் வியாக்கியானத்தை அறிவித்தார்.
‘ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களைத் தடுத்தல்’ சட்டமூலத்தின் சரத்துக்கள் அரசியலமைப்புடன் முரண்படவில்லை என்பதுடன்இ பதில் சட்டமா அதிபரினால் குழு நிலையில் மேற்கொள்வதாக உறுதியளிக்கப்பட்ட திருத்தங்களையும் நீதிமன்றத்தினால் பணிக்கப்பட்ட திருத்தங்களையும் மேற்கொள்வதற்கு உட்பட்டு, பாராளுமன்றத்தின் சாதாரண பெரும்பான்மையினால் அதனை நிறைவேற்ற முடியும் என்று நீதிமன்றம் அறிவித்துள்ளது.
பதில் சட்டமா அதிபரினால் உறுதியளிக்கப்பட்டவாறு, சட்டமூலத்தின் நீண்ட தலைப்பு, முகவுரை மற்றும் 2 முதல் 66 (40 மற்றும் 60 பிரிவுகள் தவிர) ஆகிய பிரிவுகள் குழு நிலையில் திருத்தப்பட வேண்டும்.
அதேபோல் பதில் சட்டமா அதிபரினால் உறுதியளிக்கப்பட்ட வாறு, 6 ஆம் பிரிவு சட்டமூலத்திலிருந்து நீக்கப்பட வேண்டும் என்பதுடன் முதலாம் அட்டவணையிலிருந்து 15, 16, 17 மற்றும் 33 ஆகிய உருப்படிகள் நீக்கப்பட வேண்டும் என்று உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.
உயர்நீதிமன்றத்தால் முன்வைக்கப்பட்ட திருத்தங்கள் மற்றும் அறிவுறுத்தல்கள் குறித்து ஆராய்வதற்கு ஆளுகை,நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு தொடர்பான துறைசார் மேற்பார்வைக்குழு நேற்றைய தினம் கூடி தீர்மானத்தை அறிவிக்கவிருந்தது.
இவ்வாறான பின்னணியில் துறைசார் மேற்பார்வைக்குழுவின் உறுப்பினர்களான சாணக்கியன் இராசமாணிக்கம், கஜேந்திரகுமார் பொன்னம்பலம்,அஜித் பி. பெரேரா மற்றும் முஜிபூர் ரஹ்மான் ஆகியோர் சபாநாயகருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்து ‘ பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலம் தொடர்பில் துறைசார்மேற்பார்வைக் குழுவில் மாத்திரம் கலந்துரையாடி இறுதி தீர்மானத்தை எடுக்காமல் ஜனாதிபதி குறிப்பிட்டதைப் போன்று பொது கலந்துரையாடல் ஒன்று
நடத்தப்பட வேண்டும்’என்று வலியுறுத்தினார்கள்.
இவ்வாறான நிலையில் பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் துறைசார் மேற்பார்வைக்குழு கூடிய போது பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலம் குறித்து கலந்துரையாடி தீர்மானம் எடுப்பது தொடர்பான யோசனை பிற்போடப்பட்டுள்ளது.
இதன்போது கலந்துக் கொண்ட சிவில் அமைப்பினர் பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலத்தில் பல திருத்தங்கள் உள்வாங்கப்பட வேண்டும் என்று உயர்நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. ஆகவே பாராளுமன்றத்துக்கு வெளியில் இந்த சட்டமூலம் குறித்து ஜனாதிபதி தலைமையில் விசேட கலந்துரையாடல் ஒன்று நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
அதேபோல் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் சிவில் அமைப்புக்களும் இந்த கலந்துரையாடலில் உள்வாங்கப்பட வேண்டும் என்றும் சிவில் தரப்பினர் யோசனை முன்வைத்துள்ளனர்.