சென்னை:
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதாகத் தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கில், திருப்பூர் எஸ்.பி சிருஷ்டி சிங் விசாரணை அதிகாரியாகவும், ஐஜிபி (நிர்வாகம்) காமினி கண்காணிப்பு அதிகாரியாகவும் நியமிக்கப்பட்டுள்ளதாகத் தமிழ்நாடு அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
அதிமுக வழக்கறிஞர் மனு:
இந்த விவகாரம் தொடர்பாக அதிமுக வழக்கறிஞர் திரிசூழி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், “கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் நவம்பர் 10-ஆம் தேதி மாவட்ட ஆட்சியருக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதாகச் செய்திகள் வெளியாகின. தேசிய மகளிர் ஆணையத் தலைவர் ரேவதி ரஹத்கர் தாமாக முன்வந்து அரசியல் தலையீடின்றி விசாரணை நடத்த டிஜிபிக்கு உத்தரவிட்டுள்ளார். பி.என்.எஸ்.எஸ் பிரிவு 173(3)-ன்படி புகார் இன்றியே முதற்கட்ட விசாரணை நடத்தக் காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும்,” எனக் கோரியிருந்தார்.
நீதிபதி கேள்விகள்:
நீதிபதி வி.லட்சுமிநாராயணன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தபோது, ஆட்சியரே புகார் அளிக்காத நிலையில் காவல்துறை எப்படி நடவடிக்கை எடுக்க முடியும் என நீதிபதி கேள்வி எழுப்பினார். இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, பெண் ஐஏஎஸ் அதிகாரி காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளதாகவும், வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தெரிவித்தது. “வழக்குப் பதிவு செய்த பின்பும் இணையதளத்தில் ஏன் பதிவிடவில்லை?” என நீதிபதி கேட்டதற்கு, பத்திரிகைகளில் தகவல் கசிந்துவிடக் கூடாது என்பதால் பதிவேற்றவில்லை எனக் காவல்துறை பதிலளித்தது.
கண்ணியம் காக்கப்பட வேண்டும்:
இதையடுத்து நீதிபதி லட்சுமிநாராயணன் கூறுகையில், “பாதிக்கப்பட்டவர் தலைமைச் செயலாளராகவோ, தூய்மைப் பணியாளராகவோ இருந்தாலும் அவரது கண்ணியம் காக்கப்பட வேண்டும். மாநில அளவிலான குழு விசாரித்தால்தான் சரியாக இருக்கும். இந்த விவகாரத்தில் அரசைத் தர்மசங்கடமான நிலைக்குத் தள்ள நீதிமன்றம் விரும்பவில்லை. தேவையற்ற பதிவுகள் இணையத்தில் வராமல் தடுக்க சைபர் கிரைம் நடவடிக்கை எடுக்க வேண்டும். கள்ளக்குறிச்சி காவல் கண்காணிப்பாளரின் விசாரணையை ஒரு ஐஜி கண்காணித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கில் யாரும் அரசியல் செய்ய வேண்டாம்,” என்று கூறி விசாரணையை டிசம்பர் 22-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
விசாரணை, கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம்:
இதனையடுத்து, தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் மீதான குற்ற வழக்கில் திருப்பூர் காவல் கண்காணிப்பாளர் சிருஷ்டி சிங் விசாரணை அதிகாரியாகவும், ஐஜிபி (நிர்வாகம்) காமினி கண்காணிப்பு அதிகாரியாகவும் இருப்பார்கள் என மாநில அரசுத் தரப்பு வழக்கறிஞர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
#KallakurichiMLA #ArulVignesh #MadrasHighCourt #SrishtiSingh #IGPKamini #BmNews #TamilNews #BreakingNews #LatestNews #TamilNewsLive