திருகோணமலை மாவட்டத்தின் தம்பலகாமம் பொற்கேணி பிள்ளையார் கோயில் முன்றலில் மாவீரர்களை நினைவுகூரும் நினைவேந்தல் நிகழ்வு இன்று (24.11.2026) கொட்டும் கனமழைக்கு மத்தியில் உணர்வுபூர்வமாக இடம்பெற்றது.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நினைவேந்தல் ஏற்பாட்டு குழு இதனை ஏற்பாடு செய்திருந்தனர்.
இதில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் கட்சியின் செயலாளருமான செல்வராசா கஜேந்திரன் மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்கள் உள்ளிட்ட உயிர் நீத்த மாவீரர்களின் பெற்றோர்கள், உறவினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது, தமிழர் தாயக விடுதலைப் போராட்டத்தில் உயிர்நீத்த மாவீரர்களை நினைவுகூர்ந்து நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.
அகவணக்கம் செலுத்தி கண்ணீர் மல்க மலர்தூவி மலர்மாலை அணிவித்து மெழுகுவர்த்தி ஏற்றப்பட்டு உணர்வு பூர்வமாக அஞ்சலி செலுத்தினர்.
நிகழ்வின் ஒரு பகுதியாக மாவீரர்களின் நினைவாக ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு, மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், உயிர்நீத்தவர்களின் நினைவாக மௌன அஞ்சலியும் இடம்பெற்றது.
இதன்போது கலந்துகொண்ட உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் மாவீரர்களின் தியாகங்களையும் நினைவுகளையும் உணர்வுபூர்வமாக நினைவுகூர்ந்து நினைவு பேருரைகளும் இடம் பெற்றன.
ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 27ஆம் திகதி மாவீரர் நாள் அனுஷ்டிக்கப்படுகின்ற நிலையில், அதனை முன்னிட்டு வடக்கு, கிழக்கு உட்பட தமிழர் வாழும் பகுதிகளில் நினைவேந்தல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.