மதுரை:
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினின் ஆபாசப் பேச்சு அவருடைய மனநிலையைப் பிரதிபலிக்கிறது என்றும், அவர் பகலிலேயே நிதானம் இல்லாமல் பேசுகிறார் எனவும் அமைச்சர் நிர்மல் குமார் கடுமையாக விமர்சித்துள்ளார்.
நிதானம் இல்லாத பேச்சு:
மதுரை தமுக்கம் மைதானத்தில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு விழாவில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் நிர்மல் குமார், தாராபுரம் இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் முதலமைச்சர் விஜய் குறித்து உதயநிதி பேசியதற்குப் பதிலடி கொடுத்தார். “உதயநிதி ஸ்டாலினின் பேச்சு அவரது மனதில் இருப்பதை வெளிப்படுத்துகிறது. விரக்தியின் உச்சத்தில், அவர் பகலிலேயே நிதானம் இல்லாமல் பேசுகிறார். அந்த குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மூன்று தலைமுறைகளாகவே இப்படித்தான் பேசுகிறார்கள். பொது வாழ்க்கைக்குத் தகுதியே இல்லாத அவர் அதிலிருந்து ஒதுங்கிக் கொள்ள வேண்டும்” என்றார்.
எம்.ஜி.ஆர் வழியில் பெண்கள்:
தொடர்ந்து பேசிய அவர், “40 ஆண்டுகளாக எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவைப் பின்பற்றி வந்த பெண்கள், தற்போது தமிழக முதல்வர் விஜய்யைப் பின்பற்றி வருகிறார்கள். உதயநிதி போன்ற ஒருவரை வைத்து கட்சி நடத்துவது குறித்து திமுகவினர் சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்தார்.
திமுகவுக்கு முட்டுக்கொடுக்கும் எடப்பாடி:
“அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தற்போது திமுகவுக்கு முட்டுக்கொடுக்கிறார். அவர் அதிமுகவுக்கு வாக்கு சேகரிக்கிறாரா? அல்லது திமுகவுக்கு வாக்கு சேகரிக்கிறாரா? என்ற சந்தேகம் எழுகிறது. அதிமுகவைக் குழிதோண்டிப் புதைக்கும் வரை எடப்பாடி ஓயமாட்டார்” என விமர்சித்தார்.
லஞ்சம் கேட்டால் புகார்:
“அரசு அலுவலகங்களில் 100 சதவீதம் லஞ்சம் இல்லாமல் பணிகள் நடைபெறுவதை உறுதிசெய்ய வேண்டிய பொறுப்பு எங்களுக்கு உள்ளது. யாராவது லஞ்சம் கேட்டால் கொடுக்க வேண்டாம் என முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். பொதுமக்கள் துணிந்து புகார் அளிக்கலாம்; உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்\” என்றும் அமைச்சர் நிர்மல் குமார் உறுதியளித்தார்.
#MinisterNirmalkumar #UdhayanidhiStalin #CMVijay #TNPolitics #Madurai #TVKvsDMK #BmNews #TamilNews #BreakingNewsTN #TamilNaduNews #LatestNews #TamilNewsLive