நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில், கைதிகள் படுகொலை செய்யப்பட்டதாகவும் சிறைச்சாலையில் இருந்து வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்ட கைதிகள் காணாமல் போயுள்ளதாகவும் இந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பாக முறையான மற்றும் நியாயமான விசாரணையை நடத்துமாறு கோரி, சிறைக்கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் குழு மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இன்று (30) வியாழக்கிழமை முறைப்பாடு செய்துள்ளது.
சிறைச்சாலையில் கொல்லப்பட்ட மற்றும் காணாமல் போன கைதிகளின் உறவினர்கள் மற்றும் சிறைக்கைதிகளின் உரிமைகளை பாதுகாக்கும் குழு இணைந்து உத்தியோகபூர்வமாக முறைப்பாடு அளித்ததோடு, அரச பாதுகாப்பில் இருந்த கைதிகளின் வாழும் உரிமையை உறுதிப்படுத்துமாறும், இடம்பெற்ற அநீதிகள் தொடர்பாக முழுமையான வெளிப்படைத்தன்மையுடன் கூடிய விசாரணையை நடத்தி நீதியை நிலைநாட்டுவதற்கு தலையிடுமாறும் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்தனர்.