சென்னை:
யார் என்ன சொன்னாலும் அதைப் பற்றிக் கவலைப்படவில்லை என்றும், தாம் என்ன முடிவெடுத்தாலும் அதனை விமர்சிக்க ஒரு கும்பல் இருப்பதாகவும் விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
விசிகவின் அரசியல் தாக்கம்:
சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் நடைபெற்ற விடுதலைக் கலை இலக்கியப் பேரவையின் முப்பெரும் விழாவில் விசிக தலைவர் திருமாவளவன் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், “கடந்த 25 ஆண்டுகளில் தமிழ்நாட்டு அரசியலில் விசிக ஏற்படுத்தியுள்ள தாக்கம் பல கட்சிகளின் நிலைப்பாடுகளை மாற்றியுள்ளது. இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத சனாதன எதிர்ப்பு தமிழ்நாட்டில் வலுத்துள்ளதற்கும், பாஜகவின் கனவு பலிக்காததற்கும் விசிகவின் பங்களிப்பு உள்ளது” என்றார்.
அதிகார வேட்கைக்காக அணி மாறவில்லை:
திமுக கூட்டணியிலிருந்து விலகியது குறித்துப் பேசிய அவர், “பதவிக்காகவோ, அதிகார வேட்கைக்காகவோ நாங்கள் அணி மாறவில்லை. திமுக தலைமையிலான கூட்டணியில் விசிக மட்டுமின்றி காங்கிரஸ், கம்யூனிஸ்ட், முஸ்லிம் லீக் கட்சிகளும் தொடர்ந்து நீடிக்க முடியாமல் போனதற்கு யார் காரணம் என அவர்களுக்கே தெரியும். தமிழ்நாட்டில் கூட்டணி அரசு அமைவது என்ற விசிகவின் கனவு திமுக கூட்டணியில் நடக்கும் என நினைத்தேன்; ஆனால் காலம் வேறு கணக்குகளைப் போட்டு நம் கனவை நினைவாக்கியுள்ளது. இனி தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சிதான்” என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
வைகைச் செல்வன் புகழாரம்:
இந்த விழாவில் பங்கேற்ற தவெக துணைப் பொதுச் செயலாளர் வைகைச் செல்வன் பேசுகையில், “திருமாவளவன் ஒரு சமூகத்தினுடைய குரலாக உள்ளார். வலியோடு வந்ததால்தான் அடுத்தவருடைய வலியையும் புரிந்து கொண்டிருக்கிறார். அவரை ஆதரிக்கலாம், எதிர்க்கலாம், விமர்சனம் கூட செய்யலாம். ஆனால் அவரைத் தாண்டிப் போக முடியாது” எனப் புகழாரம் சூட்டினார்.
#Thirumavalavan #VCK #TNPolitics #CoalitionGovt #DMKAlliance #Vaigaiselvan #BmNews #TamilNews #BreakingNewsTN #TamilNaduNews #LatestNews #TamilNewsLive