மதுரை:
மதுரை நகைக்கடை கொள்ளை வழக்கில் கைதான இன்ஸ்டாகிராம் பிரபலம் மீனாட்சி மற்றும் முக்கியக் குற்றவாளியின் தந்தை சுரேஷ் ஆகியோருக்கு நவம்பர் 29-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
21 கோடி ரூபாய் கொள்ளை:
மதுரை பழங்காநத்தம் – காளவாசல் பைபாஸ் சாலை நேரு நகர் பகுதியில் உள்ள பிரபல தனிஷ்க் ஜூவல்லரியின் புதிய ஷோரூமில் கடந்த 12-ஆம் தேதி அதிகாலை பெரும் கொள்ளை சம்பவம் அரங்கேறியது. கடைக்குள் புகுந்த வாலிபர் ஒருவர், சுமார் 15 கிலோ தங்கம் மற்றும் வைர நகைகளைக் கொள்ளையடித்துத் தப்பிச் சென்றார். கொள்ளைபோன நகைகளின் மதிப்பு 21 கோடி ரூபாய் இருக்கும் எனப் போலீசார் கூறினர். உடல் முழுவதும் கருப்புத் துணியைச் சுற்றிக்கொண்டும் முகமூடி மற்றும் கையுறைகள் அணிந்தவாறும் வந்து அந்த வாலிபர் நகைகளைக் கொள்ளையடித்துள்ளார். அவர் தப்பிய காட்சிகள் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்தன.
இன்ஸ்டாகிராம் பிரபலம்:
கடையில் இருந்து வெளியே வந்த பின்பு மாடக்குளம் சாலை வழியாக அவர் ஸ்கூட்டரில் தப்பிச் சென்றுள்ளார். அவர் மதுரை பழங்காநத்தம் அருட்பெரும்ஜோதி தெருவைச் சேர்ந்த இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ்களை வெளியிட்டுப் பிரபலமான நிஷாந்த் என்பது போலீசாருக்கு உறுதியானது. இதையடுத்து அவரது வீட்டில் போலீசார் அதிரடியாகப் புகுந்து 7 மணி நேரத்திற்கும் மேலாகத் தீவிர சோதனை நடத்தினர். நிஷாந்த் தனது போனை சுவிட்ச் ஆப் செய்துவிட்டுத் தலைமறைவானதையடுத்து, தனிப்படை போலீசார் பல ஊர்களுக்கும் விரைந்து தீவிரமாகத் தேடி வருகின்றனர். நிஷாந்த் கொள்ளையடித்து விட்டு மாடக்குளம் கண்மாய் பகுதிக்கு ஆட்டோவில் சென்று வந்ததும் சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது. அந்த ஆட்டோ அவருடைய தந்தை சுரேஷ் ஓட்டி வந்தது எனத் தெரியவந்ததையடுத்து, அவரைக் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர்.
காதலியுடன் ரீல்ஸ்:
கொள்ளை நடந்த தினத்தில் நிஷாந்த் யாருடன் பேசினார் என விசாரணை நடத்தியதில், மதுரையைச் சேர்ந்த மற்றொரு இன்ஸ்டாகிராம் பிரபலமான மீனாட்சியிடம் பேசியது தெரியவந்தது. இவர்கள் இருவரும் காதலித்து வந்ததோடு, நிறைய ரீல்ஸ் வீடியோக்களும் வெளியிட்டுள்ளனர். மீனாட்சியிடம் போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், 6 கிலோ அளவுக்குத் தங்க, வைர நகைகளை வீட்டிலும் கண்மாய் பகுதியிலும் பதுக்கி வைத்திருப்பதாக நிஷாந்த் கூறிய அதிர்ச்சித் தகவலைத் தெரிவித்தார். அந்த இடங்களில் விரைந்து சோதனை நடத்திய போலீசார், 6 கிலோ நகைகளையும் மீட்டனர்.
சிறையில் அடைப்பு:
இவ்வளவு பெரிய கொள்ளை பற்றி நன்கு தெரிந்திருந்தும் போலீசாருக்குத் தகவல் அளிக்காமல் கூட்டாகச் சேர்ந்து உதவிய குற்றத்திற்காக மீனாட்சி மற்றும் சுரேஷை போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர். மருத்துவப் பரிசோதனைக்குப் பின்னர் மதுரை மூன்றாவது மாஜிஸ்திரேட்டு நீதிமன்ற நீதிபதி சங்கீதா முன்னிலையில் இருவரும் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை 29-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து இருவரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். தலைமறைவாக உள்ள நிஷாந்தை நெருங்கிவிட்டதாகவும், விரைவில் அவரைக் கைது செய்து மீதமுள்ள நகைகளையும் மீட்போம் எனவும் போலீசார் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.